அவர்கள் நான் இறந்துவிட்டதாக நினைத்து என்னை விட்டுவிட்டனர் என்று தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஹெய்ட்டி ஜனாதிபதியின் மனைவி மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
கரிபீயன் தீவில் அமைந்துள்ள நாடு ஹெய்ட்டி. இதன் ஜனாதிபதி ஜொவினெல் மொய்சே ஜூலை 7ஆம் திகதி அடையாளம் தெரியாத கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவரது மனைவி மார்ட்டினுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலை விவகாரம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொலை தொடர்பாக 28 பேர் கொண்ட வெளிநாட்டுக் கூலிப்படையை ஹெய்ட்டி பொலிஸார் கைது செய்தனர். இதில் இருவர் கொல்லப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் கொலம்பியாவைச் சேர்ந்தவர்கள். 2 பேர் ஹெய்ட்டி அமெரிக்கர்கள். மேலும், இந்தக் கொலையின் முக்கியக் குற்றவாளியான கிறிஸ்டியன் இம்மானுவேல் சனோனும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் முதல் முறையாக ஹெய்ட்டி ஜனாதிபதியின் மனைவி மார்ட்டின், பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்தார்.
அதில் மார்ட்டின் மொய்சே கூறும்போது, “என் கணவரைக் கொன்றவர்கள் என் மீது தாக்குதல் நடத்தினர். நான் மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்ட அவர்கள் நான் இறந்துவிட்டதாக நினைத்து என்னை அங்கேயே விட்டுச் சென்றுவிட்டனர். இந்த தீவிரவாதக் குழுக்களும், அரசின் அமைப்பும்தான் என் கணவரைக் கொன்றன.
எங்கள் பாதுகாப்புக்காக சுமார் 30 – 50 பாதுகாவலர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் கூட இறக்கவில்லை. சின்ன காயம் கூட அவர்களுக்கு ஏற்படவில்லை” என்றார்.
என்ன நடந்தது?
ஹெய்ட்டியின் வரலாற்றை எடுத்துக்கொண்டால் அந்நாடு பெரும் கலவரங்களுக்காக அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. வறுமையாலும் வேலையின்மையாலும் கடந்த பல ஆண்டுகளாக சிக்கித் தவித்து வருகிறது. இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு ஹெய்ட்டியின் ஜனாதிபதியாக ஜொவினெல் மொய்சே தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் கலவரம் காரணமாக, அதிகாரபூர்வமாக 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்தான் மொய்சே, ஹெய்ட்டியின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
மொய்சேவின் பதவியேற்புக்குப் பிறகு நாட்டில் வறுமை, வேலையின்மை குறையவில்லை. மாறாக மொய்சேவுக்கு எதிராக நாளும் போராட்டங்கள் நடைபெற்றன. அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு விதிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.
ஹெய்ட்டி நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்பட்டது. இந்த அறிவிப்பு மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொந்தளிப்புகளின் மையமாக மொய்சே கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்தார்.
மேலும், நாட்டின் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை அவர் எடுத்தார். இதன் காரணமாக அவருடைய பாதுகாப்புக்கும் அச்சம் நிலவியது.
மொய்சேவின் பதவிக் காலம் கடந்த பெப்ரவரி மாதத்துடன் நிறைவடைந்தது. ஆனால், தான் 2017ஆம் ஆண்டுதான் பதவியேற்றதாகத் தெரிவித்து தனது பதவிக் காலத்தை ஒரு வருடம் நீட்டித்தார் மொய்சே. இந்த நிலையில் தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
1.1 கோடி மக்கள்தொகை கொண்ட ஹெய்ட்டியில் 59%க்கும் அதிகமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளனர்.