மெரினா கடற்கரையை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மறுத்து வருவதால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.
தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு என போலீசார் இன்று எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பான செய்திகள் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையில் மெரினாவில் உள்ள ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னைவாசிகளும் இன்று போராட்டக் களத்தில் குதித்தனர்.
இதனால் சென்னையில் பேருந்து மற்றும் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தைக் கைவிட வேண்டும் என நடிகர் ராகவா லாரன்ஸ் மெரினா போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்து, போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், மாணவர்கள் தங்களது அறவழிப்போராட்டத்தை உடனே அமைதியாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என நடிகர் ரஜினி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சில சமூக விரோத சக்திகள், இளைஞர்களின் போராட்டத்திற்கு களங்கம் விளைவிக்க முயற்சி செய்கின்றனர்..ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பாதுகாப்பாக இருந்த காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கக் கூடாது.
இப்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை பார்த்து நான் மிகவும் வேதனையடைகிறேன். மத்திய மாநில அரசுகள் உறுதி கூறிய பின்பு, அதற்கு கௌரவம் கொடுத்து அமைதி காப்பது தான் கண்ணியமான செயலாகும். எனவே, மாணவர்கள் தங்களது அறவழிப்போராட்டத்தை உடனே அமைதியாக முடிவுக்குக்கொண்டு வரவேண்டும்” என கேட்டுக் கொண்டிருக்கிறார்.