அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் அதிர்ச்சி வெற்றி பெற்ற ட்ரம்ப், அமெரிக்காவின் ஜனாதிபதியாகக் கூடாது என அவரின் எதிர்ப்பாளர்கள் கர்ச்சித்தனர்.
இருந்தும் அவற்றையெல்லாம் வெற்றி கொண்டு அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக ட்ரம்ப் அவர்கள் பதவியேற்றுள்ளார்.
அமெரிக்காவின் வரலாற்றில் ட்ரம்ப் அவர்களுக்கான தேர்தல் வெற்றி என்பது அமெரிக்க மக்களுக்குக்கூட அதிர்ச்சியைக் கொடுத்தது எனலாம். அந்தளவுக்கு அவர் மீது எதிர்ப்பிரசாரங்கள் நடந்தன.
இந்நிலையில் அமெரிக்காவின் ஒரு வித்தியாசமான தலைவர் தான் என்பதை ட்ரம்ப் நிரூபிக்க வேண்டியவராக உள்ளார்.
இதற்காக அவர் சர்வதேசத்தின் மீதான அமெரிக்காவின் பிடியை மேலும் வலுப்படுத்துவார் என எதிர்பார்க்க முடியும்.
இதனை உறுதி செய்வது போல அவர் பதவியேற்ற கையோடு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில்,இஸ்லாமியப் பயங்கரவாதத்தை உலகிலிருந்து இல்லாது ஒழிப்பேன் என்று சபதம் செய்தார்.
ட்ரம்ப் அவர்களின் இச்சபதம் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமாவுக்கும் ஒரு அடி என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.
அதாவது அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்கவில்லை. அல்லது அதைச் செய்யவில்லை என்பது ஒரு பொருள்.
அதன் மறுபக்கப் பொருள்; பராக் ஒபாமா அடிப்படையில் இஸ்லாமியத் தந்தைக்கு மகனாகப் பிறந்தவர். எனவே அவர் இஸ்லாமியப் பயங்கரவாதத்தை ஒழிக்க விரும்பவில்லை என்பதாகவும் அமையலாம்.
எதுவாயினும் அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ட்ரம்பின் ஆட்சி அமைதியாக நகராது என்பது மட்டும் உண்மை.
அமெரிக்காவின் மிகச் சிறந்த தலைவராகத் தன்னை காட்டிக்கொள்ள ட்ரம்ப் முயற்சிப்பார். அந்த முயற்சி இஸ்லாமிய பயங்கரவா தத்தை உலகில் இருந்து ஒழிப்பது என்பதாக இருக்கும்.
இதன் பொருட்டு உலக நாடுகள் மீதும் அங்கு இருக்கக்கூடிய தீவிரவாத அமைப்புக்கள் மீதும் ட்ரம்ப் அதீத கவனம் செலுத்துவார்.
கூடவே உலக நாடுகளுடன் ஒத்திசைவான உறவை வளர்த்துக் கொள்வதில் அவர் நாட்டம் கொள்ளார்.
மாறாக உலகின் முதல் வல்லரசு அமெரிக்கா என்பதை நிரூபித்து அதனூடாக தன்னை ஒரு சிறந்த – வீரம் பொருந்திய அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாகக் காட்ட முற்படுவார்.
அவரின் இந்த இலக்குக்கு இயற்கையும் அமெரிக்க உளவுத்துறையும் எந்தளவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இலங்கையைப் பொறுத்தவரை, ஈழத் தமிழ் மக்களின் விடயத்தில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்பின் போக்கு எவ்வாறு அமையும் என்பதே எங்கள் கரிசனையாக இருக்கும்.
இதன் அடிப்படையில் அமெரிக்காவில் இருக்கக்கூடிய தமிழ் அமைப்புக்கள் ட்ரம்பின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.
யார் ஜனாதிபதியாக இருந்தாலும் அவரின் ஆதரவை எமக்காக்குவதே அமெரிக்கத் தமிழ் அமைப்புக்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.
அவ்வாறு இருந்தால் மட்டுமே எங்களுக்கான அரசியல் தீர்வும் எங்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும்