சமீப காலமாக மாநகர பஸ்களில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் போன்றவர்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
சென்னை மாநகர பஸ்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
2500 பஸ்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தி கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டு சி.சி.டி.வி. கேமரா முதல் முதலில் மாநகர பஸ்களில் பொருத்தப்பட்டது. கல்லூரி மாணவர்கள் மோதலை தடுப்பதற்காக குறிப்பிட்ட வழித்தடங்களில் செல்லும் பஸ்களில் பொருத்தப்பட்டது. பின்னர் அந்த கேமராக்கள் அகற்றப்பட்டன.
தற்போது மாநகர பஸ்களில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் போன்றவர்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்களின் பாதுகாப்புக்காக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகள் உறுதி செய்யப்படுகின்றன.
இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அன்பு ஆபிரகாம் கூறியதாவது:-
மொத்தம் 2500 மாநகர பஸ்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அக்டோபர் மாதத்தில் இந்த பணி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு பஸ்களிலும் 3 கேமராக்கள் பொருத்தப்படுகிறது. 2 கேமராக்கள் முன் நுழைவு வழி மற்றும் பின் நுழைவு வழியை கண்காணிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
மற்றொரு கேமரா டிரைவர் இருக்கைக்கு அருகில் பொருத்தப்படுகிறது. பஸ்களில் ஏற்கனவே ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இவை மாநகர பஸ் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.