கனடா நாட்டில் பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்ட தமிழர் ஒருவர் நீதிமன்றத்தில் இருந்து தப்பியுள்ளதாக பொலிசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
லிங்கதாசன் சுந்தரமூர்த்தி(36) என்பவர் கனடாவில் உள்ள ரொறன்ரோ நகரில் குடியேறி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு 36 வயதான மனநலம் குன்றிய நபரை அடித்துக் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
பின்னர், லிங்கதாசனுக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தண்டனை காலத்தின்போது நன்னடத்தை காரணமாக தற்காலிகமாக லிங்கதாசன் வெளியே அனுப்பப்பட்டுள்ளார். ஆனால், வெளியே சென்ற லிங்கதாசன் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாமல் செயல்பட்டுள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு சாலையில் அசுர வேகத்தில் கார் ஓட்டியபோது அவரை விரட்டிச் சென்று பொலிசார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து லிங்கதாசன் மீது பல பிரிவுகளில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரொறன்ரோ நீதிமன்றத்திற்கு லிங்கதாசன் அழைத்துச் செல்லப்பட்டார்.
விசாரணை முடிந்து வெளியே வந்தபோது, பொலிசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே நிகழ்ந்த பிழையால் லிங்கதாசன் நீதிமன்றத்திலிருந்து தப்பியுள்ளார்.
இவ்விவகாரத்தை தொடர்ந்து பொலிசார் தற்போது நாடு முழுவதும் பிடிவாரண்ட் பிறபித்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், லிங்கதாசனின் புகைப்படம் மற்றும் அடையாளங்களை வெளியிட்ட பொலிசார் அவரை கண்டதும் தங்களுக்கு உடனடியாக தகவல் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.