சாப்பிடும்போது டி.வி.யையோ அல்லது வீடியோ காட்சிகளையோ பார்க்காமல் இருப்பவர்களுக்கு தொப்பை ஏற்படுவது குறைவாக உள்ளது அல்லது ஏற்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.
தொப்பை எனப்படும் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் பருமன் என்பது ஆண், பெண் வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் இன்று பொதுவாக காணப்படுகிறது. இந்த தொப்பையானது பல நோய்களுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக நடைபயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.
தொப்பை ஏற்படுவதற்கு உடல் உழைப்பு அதிகம் இல்லாததே காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சாப்பிடும்போது டி.வி.யையோ அல்லது வீடியோ காட்சிகளையோ பார்க்காமல் இருப்பவர்களுக்கு தொப்பை ஏற்படுவது குறைவாக உள்ளது அல்லது ஏற்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள ஓகியோ மாகாண பல்கலைக்கழகம் இதுகுறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. சுமார் 13 ஆயிரம் பேரிடம் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் முக்கியமாக குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும்போது டி.வி. பார்க்காமல், அதிகம் பேசாமல் உண்பதிலேயே கவனம் செலுத்துவோருக்கு தொப்பை பாதிப்பு குறைவாகவே இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
அதுபோல, வீட்டு சமையலை சாப்பிடுபவர்களைவிட, ஓட்டல்கள் உள்ளிட்ட இதர இடங்களில் தொடர்ந்து சாப்பிடுவோருக்கு தொப்பை ஏற்படுகிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் உணவு வகைகளில் வேறுபாடு இல்லாவிட்டாலும், அதை சமைப்பதற்கு எடுத்துக்கொள்ளும் சிரத்தை, அதன் சுவை, நமது விருப்பத்துக்கு உகந்த உணவு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தொப்பைக் குறைக்க வழிவகுக்கிறது என கூறப்பட்டுள்ளது.