சென்னையில் நள்ளிரவு முதல் அதிக அளவில் அதிரடிப்படை காவலர்கள் குவிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் பதற்றமடைந்துள்ளனர்.
சென்னையில் மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
இதனைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்களால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. இதில் இரண்டு காவல் நிலையங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. மேலும் 80-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர்.
நேற்று மதியத்திற்கு மேல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் நடைபெற்றாலும், வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தன.
இந்நிலையில் நேற்று மாலை வன்முறை கும்பல் ஒன்று அரும்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளை சூறையாடியது. மேலும் வடபழனி காவல்நிலையத்திற்கு தீ வைக்கவும் முயற்சி செய்தது. இதனைத் தொடர்ந்து கலவரக்காரர்களை விரட்ட ஐந்து முறை வானத்தை நோக்கி காவலர்கள் சுட்டனர்.
இந்நிலையில் நள்ளிரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் அதிரடிப்படை காவலர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் சமூக விரோதிகள், வன்முறை சம்பவங்களில் ஈடுபடலாம் என்பதால் அவர்களை கட்டுப்படுத்த கூடுதலாக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு வேளை இன்று காலை யாராவது போராட்டம் அல்லது சாலை மறியலில் ஈடுபட்டாலும் அவர்களை அப்புறப்படுத்தவும் காவலர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் காவல்துறை வாகனங்கள் சென்னை மாநகரத்தின் சந்து பொந்துகள் எல்லாம் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகின்றன. இன்று சென்னை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் கூறியுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடாகவே இந்த காவலர் குவிப்பு பார்க்கப்படுகிறது.