ட்விட்டர் விதிமுறைகளை மீறியதாக கூறி காங்கிரஸ் கட்சியின் அதிகார்வபூர்வ ட்விட்டர் கணக்கை முடக்கியது ட்விட்டர் நிறுவனம். அதனைத்தொடர்ந்து ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் ஐவரின் கணக்கை தற்காலிகமாக முடக்கியது.
இது குறித்து ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ள விளக்கத்தில் ராகுல் காந்தி டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இறந்த சிறுமியின் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இத்தகைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் தனிபட்ட தகவல்களை பகிர கூடாது என்பது டிவிட்டரின் விதிமுறை என்பதால் அந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆனால் மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே கணக்கு முடக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. மேலும், 5 ஆயிரம் பேரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதற்கு பலர் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், “ஊடகங்களை சந்திக்க மாட்டோம், விவாதங்களுக்கு அனுமதிக்க மாட்டோம் மற்று கட்சி தலைவர்களின் ட்விட்டர் அக்கவுண்டுகளை முடக்குவோம். இது போன்ற வீர தீர போர்ப்பயிற்ச்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்? ” என பதிவிட்டு மத்திய அரசை மறைமுகமாக சாட்டியுள்ளார். அவர் மத்திய அரசை நேரடியாக குற்றம் சாட்டுவதற்கு பயப்படுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும், மத்திய அரசுக்கும் – அவர் கருத்து தெரிவித்துள்ள சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம்?. பாலியல் பலாத்காரத்தால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் அடையாளத்தை வெளிப்படுத்தியது சட்டத்திற்கு எதிரானது. இதற்கும், அரசுக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.