ஸ்ரீலங்கா கடற்படையினர் தம்மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அத்துடன் மீன்பிடி வலைகளை வெட்டி சேதப்படுத்தி அங்கிருந்து தம்மை ஸ்ரீலங்கா கடற்படையினர் விரட்டி அடித்தனர் எனவும் ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கடலோர பகுதியில் இருந்து நேற்று காலை 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இதனையடுத்து கச்சதீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு 20க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் படகில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த ஸ்ரீலங்கா கடற்படையினர் குறித்த பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது என எச்சரித்துள்ளனர்.
இந்த எச்சரிக்கையை அடுத்து மீன்பிடி வலைகளை சேகரித்துக்கொண்டு அங்கிருந்து பயணமாக முற்பட்ட தம்மீது ஸ்ரீலங்கா கடற்படையினர் திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக ராமேஸ்வரம் மீனவர்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிருக்கு பயந்த மீனவர்கள் அங்கிருந்து படகுகளை ராமேஸ்வரம் கடலோரப் பகுதி நோக்கி செலுத்தியதுடன், நள்ளிரவில் மீன் பிடித்துக்கொண்டு இன்று காலையில் கரை திரும்பியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கடற்படையின் இந்த நடவடிக்கையால் 50-க்கும் மேற்பட்ட படகுகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபா முதல் ஒரு இலட்சம் ரூபா வரை மீன்பிடி வலைகள் மற்றும் சாதனங்கள் சேதமடைந்ததாகவும் மீனவர்கள் கூறியுள்ளனர். இதனால் பல இலட்ச ரூபாய் தமக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.
மேலும், ஸ்ரீலங்கா கடற்படையின் தாக்குதலால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் எனவும் ஏராளமான மீனவர்கள் முன்னதாகவே கரைக்கு திரும்பி விட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மண்டபம் கடற்கரையில் இன்று காலை மீன்வரத்து குறைவாக காணப்பட்டதாகவும் தமிழ் நாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன.