சூரியனின் புத்திரன் சனி பகவான். கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் இவர்தான். கருத்த உடலைக் கொண்ட இவர், துணிவு மிகுந்தவர். நீல நிற உடை, நீல மலர் மாலை, நீல மணி ஆகியவற்றை தரித்தவர். மகர, கும்ப ராசிகளுக்கு அதிபதி. எள் கலந்து உணவும், நல்லெண்ணெய் தீபமும் இவரது விருப்பமாகும். நன்மையும், தீமையும் பொறுத்து இவர் மக்களுக்கு பலன்களை வழங்கி வருகிறார்.
சனி பகவான் மந்தன், பங்கு, காலம், அசிதம், சாயாபுத்திரன் போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இவர் வழங்கும் பலன்களைப் பார்த்து பலரும் இவரை, ‘கெடுதல் தரும் கிரகம்’ என்றும் குறிப்பிடுவதுண்டு. ஆனால் உண்மையில், முற்பிறவியில் ஒருவர் செய்த நன்மை, தீமைகளுக்குத் தகுந்தாற்போலவே, சனி பகவான் தன்னுடைய பலன்களை வழங்கி வருகிறார்.
ஒருவரது ஜாதகத்தில் சனி உச்சமாகவோ, ஆட்சியாகவோ இருந்து, சுப கிரக சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்று, சுய ஆதிபத்தியம் அடைந்து, சுப வீடுகளில் இருந்தால், அந்த ஜாதகர் தன் வாழ்வில் இமாலய வளர்ச்சியை அடைவார். சனி பகவான் மேற்கு திசைக்குரியவர். பாவக் கிரக வரிசையில் முக்கிய இடம் இவருக்கு உண்டு. நால்வகை உபாயங்களில், பேத உபாயத்திற்கு உரியவர். துலாம் ராசி இவரது உச்ச வீடு. மகரம், கும்பங்கள் சொந்த வீடு. பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரங்களுக்கு நாயகன்.
ஆலயங்களில் உள்ள நவக்கிரகங்களை வழிபடும் பொழுது, சனி பகவானுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபடுவது சாலச் சிறந்தது.
சனி காயத்ரி மந்திரம்
‘ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்’
காகக் கொடியைக் கொண்ட சனி பகவானை அறிந்து கொள்வோம். கையில் கமண்டலத்தை ஏந்தி நிற்கும் அவர் மீது தியானம் செய்வோம். மெதுவாக நகரும் தன்மை கொண்ட சனி பகவான், நம்மை காத்து அருள் செய்வார் என்பது இதன் பொருள். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால், நீண்ட கால வாழ்வமையும். வசதிகள் பெருகும். தொல்பொருள் ஆய்வுத்துறையில் சிறந்து விளங்கலாம். தலைமைப் பொறுப்பை ஏற்கும் பாக்கியம் உண்டாகும். பல மொழி அறிவைப் பெறுவர். உயர்கல்வி பெற வாய்ப்பு வந்து சேரும். உழைப்பாளிகளுக்கு உயர்வு உண்டு.