பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடனடியாக பதவி விலகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
மத்திய வங்கியில் இடம் பெற்ற பினைமுறி மோசடி தொடர்பான விவாதம் இன்றைய பாராளுமன்ற ஒன்று கூடலில் காரசாரமாக இடம் பெற்றது.
குறித்த விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். அங்கு தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மத்திய வங்கியில் ஏற்பட்ட மோசடிக்கு பிரதான சூத்திரதாரி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே. அதனால் அவர் பதவி விலக வேண்டும் என எச்சரிக்கை செய்கின்றேன்.
நாட்டில் இடம் பெற்ற ஊழல் திருட்டில் மிக முக்கிய பங்கு அவருக்கு மட்டுமே இருக்கின்றது. இது தொடர்பில் பொய்யான அறிக்கைகளையே பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தார்.
அந்தவகையில் பிரதமர் ஒரு பொய்காரர், முறையற்ற வகையில் ஆட்சி செய்து வருகின்றார். அவர் பதவி விலகினால் மட்டுமே நாட்டை திருத்த முடியும் என வாசுதேவ பிரதமரை திட்டும் வகையில் கருத்து தெரிவித்தார்.
இவரது ஆவேச கருத்துகளால் ஆத்திரமடைந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பி வாசுதேவவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் காரணமாக மேலும் ஆத்திரமடைந்த வாசுதேவ தகாத வார்த்தைகளை பிரயோகித்து திட்டினார். தனது மூக்குக் கண்ணாடியை மேசைமேல் எறிந்தும், அறிக்கைகளை வீசியும் ஆவேசமாக செயற்படத் தொடங்கினார்.
அவருக்கு எதிராக ஆளும் கட்சி தரப்பும் விவாதிக்க தகாத வார்த்தைகளால் வாய்த்தர்க்கம் தொடர்ந்தது.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற சபைத்தலைவர் மூலமாக ஒலிவாங்கிகள் நிறுத்தப்பட்டு அமைதியை பேணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
நிமிட நேர இடைவெளியின் பின்னர் பாராளுமன்றம் சிறிது அமைதியடைந்ததைத் தொடர்ந்து வாசுதேவ,
பிரதமர் ஓர் முறைகேடான திருடன் அதனைக் கூற நான் அச்சமடைய போவதில்லை. எப்படியும் இந்த ஆட்சி வீட்டுக் செல்லப்போவது உறுதி.
பிரதமர் தனது கட்டுப்பாட்டிலேயே அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகின்றார். நீதி, நிதி உட்பட அனைத்துமே பிரதமர் கட்டுப்பாட்டில்.
பொலிஸ்மா அதிபர் மீதும் நீதி அமைச்சர் மீதும் பிரதமர் ஏறி அமர்ந்துள்ளார். அதிகாரங்களின் மீது ஏறி அமர்ந்துள்ளார். அந்தத் திருடன் தனது பதவியை விட்டு விலக வேண்டும் அப்போதே ஊழல்களுக்கான நீதி கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் பல வித எதிர்ப்புகளும் கூச்சலும் வாய்த்தர்க்கங்களும் இடம் பெற்றதோடு சலனநிலையும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.