தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடை குறைத்தது அமெரிக்கா
வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை குறைக்கும் ஆவணங்களில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டிரம்ப், நாட்டின் நிதி திட்டமிடல்கள் தொடர்பான பரிசீலனைகளை மேற்கொண்ட நிலையிலேயே குறித்த ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
பதவியேற்ற நாள் முதல் டிரம்ப் பல்வேறு திட்டங்களுக்கு தடையை ஏற்படுத்தியிருந்தார். அதில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா அறிமுகப்படுத்திய மருத்துவ காப்பீடு திட்டமே முதலாவது தடை உத்தரவை பெற்றது.
மேலும் சீனாவை புறக்கணித்து ஜப்பான், கனடா, மெக்ஸிகோ, அவுஸ்திரேலியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை கொண்டு ஒபாமா அறிமுகப்படுத்தியிருந்த டிரான்ஸ் பசிபிக் கூட்டு ஒப்பந்தத்தையும் டிரம்ப் தற்போது திரும்ப பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது அமெரிக்க தொண்டு நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பாரிய நிதியை குறைக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.