நாட்டில் பரவிவரும் கொவிட் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான ஒரே வழி, நாட்டை தொடர்ந்து முடக்குவதுதான் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றினால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றமை குறித்து, விசேட உரையை நிகழ்த்திய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், வைத்தியர்களின் ஆலோசனையின் பிரகாரம் போதுமானது கிடையாது என அவர் கூறியுள்ளார். நாட்டில் கொவிட் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்றால், குறைந்தது மேலும் இரண்டு வார முடக்க நிலைமை அத்தியாவசியமானது என ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போதுள்ள நிலைமையின் பிரகாரம், நாடு முடக்கப்படாமல் ஏற்படும் பொருளாதார பாதிப்பை விடவும், நாடு முடக்கப்பட்டு ஏற்படும் பொருளாதார பாதிப்பு குறைவு என அவர் சுட்டிக்காட்டினார். பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்றால், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொவிட் தொற்றினால் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் ராஜ் ராஜமகேந்திரன், சட்டத்தரணி டி.எஸ்.விஜேசிங்க உள்ளிட்ட மிக முக்கியஸ்தர்கள் கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்ததை, ரணில் விக்ரமசிங்க இதன்போது நினைவுகூர்ந்தார்.