சவுதி அரேபியாவில் மனைவியும் பிறந்த பிஞ்சு குழந்தையும் கொரோனாவால் மரணமடைந்த நிலையில், இந்தியா திரும்பிய இளைஞர் குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்திய மாநிலம் கேரளாவின் ஆலுவா பகுதியில் வசிக்கும் 32 வயதான விஷ்ணு என்பவரே வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டவர்.
சவுதி அரேபியாவில் கணக்காளராக பணியாற்றி வந்த விஷ்ணு, கத்தீஃப் பகுதியில் மனைவி காதா(27) என்பவருடன் தங்கி வந்தார். ஆறு மாதம் கர்ப்பிணியான மனைவியை கேரளாவுக்கு அழைத்துவர முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து கத்தீஃப் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காதா அனுமதிக்கப்பட்டார். இதனிடையே கொரோனா பாதிப்பால் காதாவின் உடல் நிலை மோசமடையவே, குழந்தையை அறுவைசிகிச்சை மூலம் காப்பாற்ற முயன்றுள்ளனர்.
ஆனால் அதே நாள் கொரோனா பாதிப்பின் தாக்கம் அதிகமாகவே, காதா சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். காதா மரணமடைந்த இரண்டாவது நாள், பிறந்த குழந்தையும் மருத்துவமனையிலேயே மரணமடைந்துள்ளது.
மனைவியும் பிஞ்சு குழந்தையும் சில நாள் இடைவெளியில் மரணமடைந்த சம்பவம் விஷ்ணுவை உலுக்கியுள்ளது. மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த விஷ்ணு, கடந்த 5ம் திகதி சவுதி அரேபியா பயணக் கட்டுப்பாடுகளை நீக்கிய நிலையில் கேரளா திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை தமது குடியிருப்பில் தூக்கிட்ட நிலையில் விஷ்ணு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.