சோதனைகளை அதிகரிப்பதன் மூலம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவரையும் கண்காணிக்க அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை என்று அரச தாதிய உத்தியோகத்தர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய ஊடகங்களுடன் பேசும்போது இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.
முடக்கம் இருந்தபோதிலும் தினசரி நடத்தப்படும் பிசிஆர் மற்றும் ரேபிட் ஆன்டிஜென் சோதனைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்ட தரவுகளின் மூலம், தெளிவாகிறது.
முடக்கம் அமுலாக்கப்படுவதற்கு முன்பு ஓகஸ்ட் 19 ஆம் திகதி, 22,290 பிசிஆர் சோதனைகள் உட்பட கிட்டத்தட்ட 28,500 சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் ஆகஸ்ட் 27 ஆம் திகதிக்குள் கோவிட் தொற்றுநோய்களைக் கண்டறிய தினசரி நடத்தப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை 22,500 ஆகக் குறைந்துள்ளது என்று சமன் ரத்னப்ரிய குறிப்பிட்டார்.
சோதனைகள் குறைக்கப்பட்ட போதிலும், ஒரு வாரத்தில் நாடு முழுவதும் 30,625 புதிய நோய்த்தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இது ஒரு ஆபத்தான நிலை. ஏனெனில் சில நாடுகள் 23 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் ஒரே ஒரு புதிய தொற்றாளரை கண்டறிந்த பிறகு பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
நாட்டில் உள்ள அனைத்து கொரோனா வைரஸ் தொற்றாளர்களையும் கண்டறிய அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என்று சமன் ரத்னப்ரிய கூறினார்.
நெருக்கடி மேலும் மோசமடைவதற்கு முன்பு அதை முடிவுக்குக் கொண்டுவர குறைந்தபட்சம் இப்போது அரசு அறிவியல் அணுகுமுறையை நாட வேண்டும் என்று அவர் கூறினார்.