கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ், பைஸர் தடுப்பூசியை செலுத்தும் முழுமையான அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பைஸர் மற்றும் அஸ்ட்ராசேனிகா ஆகிய தடுப்பூசிகள் இதற்கு முன்னர், முறையின்றி, வேறு நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது எனவும் மேலும் தெரிவித்துள்ளளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர்களின் விபரங்கள், ஆவணங்களில் பதியாது, மறைக்கப்பட்டுள்ளன.
சுகாதார தரப்பினால் புத்தளம் பகுதிக்கு செலுத்தப்பட்ட பைஸர் தடுப்பூசி, வெளிநபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளமை அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, பைஸர் தடுப்பூசிகளை செலுத்தும் பொறுப்பு இராணுவத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் பைஸர் தடுப்பூசி இராணுவ தலைமையகத்தில், உரிய தரப்பிற்கு செலுத்தப்படும்.
தடுப்பூசி செலுத்தும் நடைமுறைக்கு அப்பாற் சென்று, தகுதியற்ற எந்தவொரு நபருக்கும் பைஸர் தடுப்பூசி செலுத்தப்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொவேக்ஸ் திட்டத்தின் கீழ், அமெரிக்காவினால் இலங்கைக்கு ஒரு லட்சம் பைஸர் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டிருந்தன.