கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என மத்திய உள்விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த ஆண்டு மார்ச்சில் ஊரடங்கு நடைமுறைப்படுததப்பட்டது. இதனால், நாடு முழுவதும் பேருந்து, புகையிரதம் மற்றும் விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இதேபோல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள், கோவில்கள் மூடப்பட்டன. வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்தது. இதற்கிடையே, நடப்பு ஆண்டில் கொரோனா 2ஆவது அலையில் முதல் அலையை விட அதிக பாதிப்புகள் காணப்பட்டன. இதனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.
இந்நிலையில், மத்திய உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடப்பு ஆண்டில் வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.
பேரிடர் மேலாண் சட்டம் 2005இன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.