அவுஸ்திரேலியாவில் கார் விபத்தில் சிக்கிய இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மெல்போர்ன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. மர்ம நபர் ஒருவர் காரை வேகமாக ஓட்டிச் சென்று பாதசாரிகள் மீது மோதி இந்த விபத்தை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த பயங்கர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் பெண் உட்பட 31 பேர் படுகாயம் அடைந்தனர்.
30 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் நேத்ரா கிருஷ்ணமூர்த்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் ஐ.டி. ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தனது 8 மாத ஆண் குழந்தையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் அவரது மண்டை உடைந்ததோடு, உடலின் உட்பகுதிகள் பலத்த சேதமடைந்தன. இதனால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மர்ம நபர் காரை ஒரு இடத்தில் இருந்து திருடி சென்றபோது விபத்தை ஏற்படுத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இருப்பினும் குறித்த அந்த நபர் இந்த வழக்கில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.