கேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தில் தற்காலிகமாக வாழ்ந்துவரும் 287 குடும்பங்களை சேர்ந்த மக்களின் காணிகள் மீளக்கையளிக்கப்படும் காணிகளுக்குள் உள்வாங்கப்படவில்லை.
இதனால் ஜனாதிபதி வரும்போது இராணுவத்தினரால் கையகப்படுத்தபட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி மக்கள் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த தகவலை அறிந்திருந்த 59 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர், ஜனாதிபதி வரும்போது கேப்பாப்புலவு மாதிரி கிராம மக்களை எந்தவொரு போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என வலியுறுத்தியுள்ளதாக கேப்பாப்புலவு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மக்களின் காணிகளை பலவந்தமாக கையகப்படுத்தியிருக்கும் இராணுவத்தினர் தமது காணிகளை விடுவிக்க கோரி ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்து முற்படும் மக்களை தடுப்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்திலும் இராணுவத்தினர் இவ்வாறான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ள விடயம் அரசாங்கத்திற்கு தெரியாமல் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போதைய எளிமையான நல்லாட்சி அரசு இந்த விடயத்தை எவ்வாறு கையாளப்போகின்றது என்பதே இன்றைய முக்கிய கேள்வியாக உள்ளது.
இதேவேளை வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் பொதுமக்கள் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் மைத்திரிபாலசிறிசேனவின் முல்லைத்தீவு விஜயம் எப்படி அமையப்போகின்றது. அவர் எவ்வாறு காணிகள் மீளக் கையளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த போகின்றார் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றது தமிழ் சமூகம்.