யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை கரம்பொன் பகுதியில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொள்ளையர்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் நெடுந்தீவு ஆறாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய கர்ப்பிணி பெண்ணொருவரே பலியானார்.
குறித்த பெண் தனது வீட்டில் தனிமையில் இருந்தபோது கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையிட முற்பட்டுள்ள வேளையில் கொள்ளையர்களுக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் குறித்த கர்ப்பிணி பெண் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அயலவர்கள் காவற்துறைக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து , முச்சக்கரவண்டியொன்றில் தப்பிச்சென்ற குறித்த கொள்ளையர்களை காவற்துறையினர் மடக்கிப்பிடித்துள்ளனர்.
இதன் போது இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஊர்காவற்றுறை காவல் நிலையத்திற்கு முன்னால் பொதுமக்கள் கூடியுள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.