ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழ்நாட்டிலும், இலங்கை உட்பட உலகில் தமிழர்கள் வாழும் ஏனைய நாடுகளிலும் போராட்டங்கள் மும்முரமாக நடைபெற்றன. தமிழக அரசின் அறிவிப்பையடுத்து ஒரு வார காலமாக இடம்பெற்ற இந்தப் போராட்டங்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளன.
இந்தப் போராட்டத்தை சமூக வலைதளங்கள் வாயிலாகவே இளைஞர்கள் ஒன்று திரட்டியதும் நீங்கள் அறிந்ததே!
இந்த நிலையில், மதுரையில் தமுக்கம் – அழகர்கோவில் வீதியில் நடைபெற்ற ஒரு வார காலப் போராட்டத்துக்கான முதல் அழைப்பை விடுத்தவர் இந்தியாவிலேயே இல்லை என்ற ஆச்சரியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் போராட்டத்துக்கான முதல் அழைப்பை விடுத்திருப்பவர் உக்ரெய்னில் பொறியியல் கற்று வரும் மதுரை மாணவர் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து பொலிஸார் விசாரித்தபோதே இந்தத் தகவல் அம்பலமாகியுள்ளது.
பொலிஸார் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தபோது, தான் மதுரை – அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் என்றும் உக்ரெய்னில் பொறியியல் கல்லூரியில் கல்வி கற்று வருபவர் என்றும், தனக்கு வந்த ஒரு வட்ஸ் அப் தகவலை மதுரையில் உள்ள தனது நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு தனது அன்றாட நடவடிக்கையைக் கவனிக்கச் சென்றுவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
அவர் அனுப்பிய அந்த ஒரு செய்தியே இளைஞர்கள் மூலம் காட்டுத் தீயாகப் பரவி தமுக்கத்தில் கடந்த ஏழு நாட்களாக ஆர்ப்பாட்டமாக வெடித்திருப்பது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.