நிதி அமைச்சு தன்னிச்சையான தீர்மானங்களை எடுத்து செயற்படுகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற போது ஜனாதிபதி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…
20 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட லொத்தர் சீட்டு எவ்வித திட்டமிடலும் இன்றி அவசரமாக 30 ரூபாவாக உயர்த்துவதற்கு நிதி அமைச்சு எடுத்த எதேச்சாதிகார தீர்மானத்தினால், மிகவும் கஸ்டங்களுடன் வாழ்ந்தவர்களும் அரசாங்கத்தை திட்டித் தீர்க்க தொடங்கினர்.
லொத்தர் சீட்டின் விலையை அதிகரிப்பதற்கு எந்த வகையிலும் நான் அனுமதியளிக்கப் போவதில்லை.
வரி அதிகரிப்பு தொடர்பில் மக்கள் அரசாங்கத்தை திட்டத் தொடங்கியுள்ளனர்.
லொத்தர் சீட்டு விற்பனையின் ஊடாக 20000 பேர் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்கின்றனர்.இதில் அதிகமானவர்கள் அப்பாவி வறிய மக்களாவர். சிலர் கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளாவர்.
லொத்தர் சீட்டு விலையை உயர்த்தியதன் மூலம் இது வரையில் அரசங்கத்தை திட்டித் தீர்க்காதவர்களும் திட்டத் தொடங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
லொத்தர் சீட்டு விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணத்தை நிதி அமைச்சர் தெளிவுபடுத்த முயற்சித்த போது, ஜனாதிபதி இவ்வாறு கடுமையான தொனியில் கருத்து வெளியிட்டுள்ளார்.