மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்றிருக்கவில்லை.
மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கூறி சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோப்குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நேற்று நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டது.
எனினும் இந்த விவாதத்தில் முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச பிரசன்னமாகியிருக்கவில்லை.
விவாதத்தின் இடைநடுவில், “எங்கே மஹிந்த ராஜபக்ச, இன்று விவாதத்தில் பங்கேற்கவில்லையா” என நிதி அமைச்சர் அவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
எனினும் இந்தக் கேள்விக்கு கூட்டு எதிர்க்கட்சியின் எவரும் பதிலளிக்கவில்லை.
ஜே.வி.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் கூட்டு எதிர்க்கட்சி ஆகியனவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய வங்கி பிணை முறி தொடாபில் விவாதத்தில் பங்கேற்று கருத்துக்களை முன்வைத்த போதிலும், கடந்த அரசாங்கத்தின் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ச இந்த விவாதங்களில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.