ஒரு நடிகர் திரையில் தோன்றும் ரசிகனின் கைதட்டலும், விசில் சப்தமும் அங்கு காதை பிளக்கிற அளவுக்கு கேட்கிறதென்றால் அது ஹீரோக்களின் வருகையின்போதுதான். இந்த பட்டியலில் தற்போது சில காமெடி நடிகர்களும் அடங்கியுள்ளார்கள். நான் கடவுள் ராஜேந்திரன், யோகி பாபு ஆகியோர் இந்த பட்டியலில் முன்னணி வகிக்கிறார்கள்.
இதில் யோகி பாபுவின் தோற்றம், அவருடைய பாடி லாங்குவேஜ், அவர் பேசும் பாஷை என அனைத்துமே ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்திருக்கிறார். இப்போதெல்லாம் இவர் ஒரு படத்தில் வருகிறாரென்றால், ஹீரோக்களைவிட இவரைத்தான் ரசிகர்கள் ரொம்பவும் எதிர்பார்க்கிறார்கள். அந்தளவுக்கு ரசிகர்கள் மத்தியில் இவரது காமெடி வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது இவரது கைவசம் இருபதுக்கும் மேற்பட்ட படங்கள் இருப்பதாக கூறுகிறார்கள். தினமும் இவரிடம் யாராவது ஒருவர் கதை சொல்லிக்கொண்டே இருக்கிறார்களாம். தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், இந்த புத்தாண்டில் வித்தியாசமாக ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று யோகி பாபு சபதம் எடுத்திருக்கிறாராம்.
அந்த வரிசையில் தற்போது கே.பி.ஜெகந்நாத் என்பவர் இயக்கும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ படத்தில் வித்தியாசமான ரொமான்ஸ் செய்யும் வேடத்தில் நடிக்கிறாராம் யோகி பாபு. கே.பி.ஜெகந்நாத் விஜய்யை வைத்து ‘புதிய கீதை’ என்ற படத்தை இயக்கியவர். இப்படத்தின் நாயகியான ‘கயல்’ ஆனந்தியை இவர் ஒருதலையாய் காதலிக்கிற மாதிரியான காட்சிகள் நிறைய வருகிறதாம்.
ஏற்கெனவே, ‘ரெமோ’ படத்தில் பெண் வேடத்தில் இருக்கும் சிவகார்த்திகேயனை சுற்றி சுற்றி ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் யோகி பாபு கலக்கியிருந்தார். அதேபோல், இந்த படத்தில் நிஜ ஹீரோயினை மடக்க அவரை சுற்றி சுற்றி ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் எல்லாம் அனைவருக்கும் சிரிப்பை வரவழைக்குமாம். இந்த படம் அவர் இதுவரை செய்த கதாபாத்திரங்களிலேயே புதிதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.