காணாமல் போன தமது உறவுகளை தேடித்தருமாறு அவர்களது உறவுகள் இரவு பகலாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், காணாமல் போனோரில் பலர் உயிருடன் இல்லையென்றே தாம் நம்புவதாகவும் காணாமல் போனவர்கள் தொடர்பில் எந்தவொரு தகவலையும் இலங்கையில் தேடமுடியாதென பொலிஸார் அறிவித்துள்ளனர் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். பிரதமர் இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்-
”காணாமல் போனோர் தொடர்பில் தமக்குத் தெரிந்த தகவல்களை வழங்குவதாக பொலிஸ்மா அதிபர் கூறியுள்ளார். காணாமல் போனோர் தொடர்பில் எந்தவொரு தகவல்களையும் இங்கு தேடிக்கொள்ள முடியாமல் இருக்கின்றதென பொலிஸார் அறிவித்துள்ளனர். இங்குள்ளவர்கள் தொடர்பான தகவல்களை தேடிக்கொள்ளலாம். ஆனால், அவர்கள் வெளிநாடு சென்றுள்ளார்களா என்பதற்குரிய எந்தவொரு ஆதாரமும் சட்டரீதியாக கிடையாது. சட்டவிரோதமாக அல்லது வேறு வழியாக அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றார்களா என்று தெரியவில்லை.
காணாமல் போனோரில் சிலர் உயிருடன் இல்லை என்றே நான் நினைக்கின்றேன். எனவே, அவ்வாறானவர்களுக்கு வழங்கவேண்டிய நஷ்டஈடு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராய்ந்து கொள்கை ரீதியான முடிவொன்றை எடுக்க வேண்டியுள்ளது” என்றார்.