மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குறித்த கோப் குழுவின் விசாரணை அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்புவதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த அறிக்கை தொடர்பான விவாதம் நேற்றும் இன்றும் நாடாளுமன்றில் நடைபெற்ற நிலையில், இன்று (புதன்கிழமை) நடைபெற்ற விவாதத்தையடுத்து குறித்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பான விசாரணை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கோப் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், பல சர்ச்சைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் மத்தியில் அதன் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் அதன் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் மருமகனான அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழு ஏற்கனவே பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த மோசடி தொடர்பாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இவ்வாரம் வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரி கடந்த வாரம் தெரிவித்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.