யாழ்ப்பாணம் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு வேளையில் நடத்தப்பட்ட திருமணத்தில் கலந்து கொண்ட 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 15 வயதிற்குட்பட்ட 14 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
காரைநகர் பகுதியில் கடந்த முதலாம் திகதி , ஊரடங்கு அமுலில் உள்ள வேளை பந்தல் அமைக்கப்பட்டு திருமண நிகழ்வு நடைபெற்றது. இதில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
திருமணத்தில் எடுத்துக்கொண்ட குழு புகைப்படங்கள் உள்ளிட்ட படங்களையும் முகநூலில் அன்றைய தினமே திருமணத்தில் கலந்துகொண்ட ஒரு சிலர் பகிர்ந்து கொண்டனர்.
அதில் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காது பலர் திருமணத்தில் கலந்து கொண்டமை உறுதியானதை அடுத்து சுகாதார பிரிவினர் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் திருமணத்தில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தினர்.
அதேவேளை ஊரடங்கு அமுலில் உள்ள வேளை சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் நடாத்தப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சுகாதார பிரிவினர் வழக்கு தாக்கல் செய்தனர். நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக கடந்த செவ்வாய்க்கிழமை திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
நேற்று இரவு வெளியான பரிசோதனை முடிவில் 34 பேருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க முயன்ற போது . சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர் ஆகியோரை தாக்க முற்பட்டு அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் 03 பேர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
39 வயது தாயார், அவரது 11,9,7 வயதுடைய ஆண் பிள்ளைகள், 41 வயதான தாயார் அவரது 20, 15 வயதுடைய பிள்ளைகள், இன்னொரு குடும்பத்தில் 14,13,12,9 வயதுடைய பிள்ளைகள், இன்னொரு குடும்பத்தில் 37 வயதான தாயார் 10,8,5 வயதான பிள்ளைகள், இன்னொரு குடும்பத்தில் 39 வயதான தாயும் 14 வயதான மகளும், பிற குடும்பங்களில் 7 வயது சிறுமி, 9 வயது சிறுவன், இன்னொரு குடும்பத்தில் வயோதிப தம்பதியும், அவர்களின் மகன், மருமகனும் தொற்றிற்குள்ளாகினர்.