சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அதனால் கருவுற்ற நிலையில், மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 30 வயது இளம்பெண்ணொருவர் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொடூரத்தில் ஈடுபட்ட காமுகர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நீதிமன்றம் அவர்களை காவல் துறையினர் விசாரணை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், பாலியல் பலாத்காரத்தால் கருவுற்று பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெரும் சோகம் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அமராவதி மாவட்டம் தர்யாபூர் (Daryapur) பகுதியில், 15 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்த சிறுமியை அப்பகுதியை சார்ந்த காமுகன் தொடர்ந்து பல மாதமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான். மேலும், சிறுமியை சீரழித்துவிட்டு வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் என்றும் மிரட்டி சென்றுள்ளான்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி நடந்ததை வெளியே கூற முடியாமல் உயிருக்கு பயந்து அஞ்சி இருந்த நிலையில், அவர் கருவுற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்த காரணத்தால் பெரும் மன துயருக்கு உள்ளாகிய சிறுமி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, சிறுமியின் கடிதத்தை கைப்பற்றுகையில் பெரும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இது தொடர்பாக யெவ்டா காவல் நிலைய உதவி ஆய்வாளர் திலீப் பாட்டீல் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் தகவல் அடிப்படையில் காமுகனை கைது செய்தார்.
சிறுமியை சீரழித்த காமுகனை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், 15 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை செய்த நீதிமன்றம் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.