தமிழகத்தில் 7 மாத கர்ப்பிணி பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மேலவஸ்தாவடியை சேர்ந்தவர் முத்துக்குமார் (35), இவருக்கும் உதயா (32), என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தரணிதரன் (5) என்ற மகன் உள்ளான்.
திருமணமான சில மாதங்களில் முத்துக்குமார் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று விட்டார். இதையடுத்து முத்துக்குமார் தம்பி நந்தகுமார், தந்தை மனோகர் (60) தாய் ராஜலெட்சுமி ஆகிய மூவரும் சேர்ந்து உதயாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளனர்.
இதனால், செய்வதறியாது திகைத்த உதயா வேதனைப்பட்டு வந்தார், பின்னர் வேறு வழியின்றி தனது தந்தை வீட்டுக்கு சென்று வசித்து வந்தார். இதன் பின்னர் உதயாவின் தந்தை சந்திரசேகர், தனது மகளை மீண்டும் முத்துக்குமார் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். மீண்டும் உதயாவை துன்புறுத்திய வண்ணமே இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், உதயாவின் கணவரான முத்துக்குமார் வெளிநாட்டிலிருந்து கடந்த ஜனவரி மாதம் திரும்பிய நிலையில், மீண்டும் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்று வாழ்ந்து வந்தார். இதில் 7 மாதம் கர்ப்பிணியாக இருந்த உதயாவை மீண்டும் கணவர் முத்துக்குமார், அவரது குடும்பத்தினர், சேர்ந்து துன்புறுத்தியுள்ளனர்.
குடும்பத்தாருடன் சேர்ந்து வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவரும் இப்படி செய்கிறாரே என விரக்தியில் இருந்தார் உதயா. இந்த சூழலில் கடந்த 9ம் திகதி உதயா தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த உதயாவின் தந்தை சந்திரசேகர் பதறியபடி வந்து பார்த்த போது, மகளின் உடலில் தீக்காயங்கள் அதிகளவில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார், இதன் காரணமாக உதயாவின் குடும்பத்தார் கண்ணீரில் மூழ்கினர். இதையடுத்து மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சந்திரசேகர் பொலிசில் உடனடியாக புகார் கொடுத்தார்.
புகாரையடுத்து பொலிசார் முத்துக்குமார், அவரது தந்தை மனோகர் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில் கர்ப்பிணியின் மரணத்தில் பல்வேறு புதிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.