யாழ்ப்பாணம் கொட்டடியில் கோயில் வாசலில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த பெண்ண்ணுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருவரும், கிளிநொச்சியில் ஒருவருமாக இரு மாவட்டங்களிலும் நேற்று கொரோனா தொற்றால் மூவர் உயிரிழந்துள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வக அறிக்கையிலேயே இந்த விடயம் நேற்று வெளியானது. மேலும், மயங்கி வீழ்ந்து உயிரிழந்தவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 68 வயது பெண்ணாவார்.
தவிர, யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவால் மாதிரிகள் அனுப்பப்பட்ட 84 வயது மூதாட்டியும் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் என்று தெரியவருகின்றது. அதேபோன்று, கிளிநொச்சியில் உயிரிழந்த 78 வயது பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதேவேளை, நேற்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 262 பேரில் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் அவர்களில் 22 பேர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 பேருக்கும் மன்னாரில் ஒருவர், கிளி நொச்சியில் ஒருவர் காங்கேசன்துறை கடற்படையில் இருவர், மன்னார் கடற்படையில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.