ஓரின திருமணம் மாத்திரமல்லாது பாலியல் தொழிலையும் சட்டமாக்குமாறு ஒருமுறை யோசனை முன் வைக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு உரையாற்றிய ஜனாதிபதி,
ஓரினச் சேர்க்கையாளர்கள் தொடர்பான கதை அமைச்சரவைக்குக் கொண்டுவரப்பட்டது.
நான் அதனை, தூக்கி வீசினேன். அதேபோல் அமைச்சரவைப் பத்திரங்களில் பாலியல் தொழிலை சட்டமாக்குமாறும் யோசனை முன்வைக்கப்பட்டது. அதனையும் நானே தடுத்தேன். நான் எனது பணியை சரியாகச் செய்கின்றேன்.
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறிப் பத்திர விவகாரத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும் விசாரணை துரிதப்படுத்தவே தான் விசேட ஆணைக்குழுவை நியமித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் குற்றவாளிகளைத் தண்டிக்கும் விடையத்தில் கட்சி பேதமின்றி அனைவரினதும் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.