மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் புதிய கட்சி தொடங்குவது குறித்து தீபா ஆதரவாளர்களின் ரகசிய ஆலோசனை கூட்டம் சென்னை அயனாவரத்தில் 24 ஆம் திகதி நடைபெற்றது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்றார்.
இதற்கிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அ.தி.மு.கவில் ஒரு பிரிவினர் ஆதரிக்க தொடங்கினர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டிற்கு திரண்டு வந்த ஆதரவாளர்கள் தீவிர அரசியலுக்கு வரவேண்டும், புதிய கட்சி தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
தீபாவையும் அவரது கணவர் மாதவனையும் சந்தித்து உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் தெரிவித்தனர். அதற்கு தீபா எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் முக்கிய முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.
கடந்த 17-ந்தேதி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் தீபா புதிய கட்சி தொடங்குவது பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்திகதி புதிய அறிவிப்பை வெளியிடுவதாகவும் தீவிர அரசியலில் குதிப்பேன் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் தீபா ஆதரவாளர்களின் ரகசிய ஆலோசனை கூட்டம் சென்னை அயனாவரத்தில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் தீபாவின் கணவர் மாதவன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் திருச்சி சவுந்திரராஜன், பெரம்பலூர் இளவரசன், கோவை மலரவன், பொள்ளாச்சி ரத்தினம், உடுமலை மணிவாசகம் உள்பட 7 பேர் பங்கேற்றனர்.
முன்னாள் எம்.பி. சேலம் அர்ஜீனன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், காதி கிருஷ்ணசாமி, விழுப்புரம் மணிகண்டன், அன்பு செல்வன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்பட 300 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாளில் புதிய கட்சி தொடங்குவது குறித்து உறுதி செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் கட்சி செயல்பாடுகளை முறைப்படுத்த உறுப்பினர் சேர்க்கை படிவம் வினியோகிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் ஏரி, குளங்களை தூர்வாரும் பணியை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற திட்டமும் வகுக்கப்பட்டது.
இது குறித்து முன்னாள் எம்.எல்ஏ. மலரவன் கூறியதாவது:- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ல் புதிய கட்சி தொடங்குவது, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, தமிழகம் முழுவதும் தூர்வாரும் பணியை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சென்னை கோயம்பேட்டில் கட்சியின் தலைமை அலுவலகத்தை திறப்பது எனவும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். தி.மு.கவில் இருந்து பிரிந்து அ.தி.மு.க.வை தொடங்கியது போல தீபாவிற்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. தொண்டர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.