சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் சகோதரர்கள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் சிறைசாலைக் கைதிகளுக்கு மாத்திரம் இல்லாமல் பௌத்த துறவிகளுக்கும் கொலை மிரட்டல் விடுவதில் வல்லவர்கள் என சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மெடில்ல பஞ்ஞலோக்க தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் சகோதரர் என்று கூறப்படும் நபரால் தங்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த காலத்தில் இணையத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டமையால் லொஹானின் சகோதரர் எனக் கூறப்படும் நபரால் தங்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மிகவும் கடினமாக உருவாக்கிய அரசாங்கத்தின் பெயர், கொள்கைக்கு அவப்பெயர் ஏற்படுத்தாமல் வெட்கம், சுய கெளரவம் இருந்தால் ஏனைய அமைச்சுகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிருந்தும் இராஜினாமா செய்யுமாறும் தேரர் குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் பௌத்த துறவிகளுடன் இவ்வாறு செயற்பட முடியும் என்றால் சிறைக் கைதிகளிடம் எவ்வாறு செயற்பட்டிருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை என்றும், சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ள சிறைச்சாலை சம்பவத்தில் கூட அமைச்சரின் நடத்தை எவ்வாறு அமைந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர் லொஹான் ரத்வத்தை தற்போது இரத்தினக் கல் ஒன்றை எடுத்துக் கொண்டு இரத்தினக்கல், ஆபரணத் தலைவருடன் இணைந்து விற்க வேண்டிய இரத்தினக் கல்லை சீனாவுக்கோ அல்லது ஏனைய நாட்டுக்கோ விற்றுவிட்டு தற்போது பதவி வகிக்கும் இரத்தினக்கல் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து கெளரவத்துடன் விலகி விடுவது நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.