தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது முழு ஆதரவை தெரிவித்திருந்தார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ‘கொம்பு வச்ச சிங்கமடா’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்டிருந்தார். அந்த பாடல் மூலம் கிடைக்கும் வருமானத்தை நலிவடைந்த விவசாயிகளுக்கு கொடுக்கப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
தற்போது ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தனது கவனத்தை விவசாயிகளின் பிரச்சினைகள் பக்கம் திருப்பியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். தற்போது விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சூழல் தமிழகத்தில் அரங்கேறி வரும் நிலையில், அவர்களை காப்பாற்றும் நோக்கத்தில் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்க ஜி.வி.பிரகாஷ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
தொண்டு நிறுவனத்தின் முதல் முதலீடாக அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முழு சம்பளத்தையும் கொடுக்க முடிவு செய்துள்ளாராம். இதற்கான பணிகளில் தற்போது ஜி.வி.பிரகாஷ் முழு வீச்சில் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தொண்டு நிறுவனம் தொடங்குவதற்கு பல வழிமுறைகள் இருப்பதால், அவை அனைத்தும் முடிந்தவுடன் முறைப்படியாக அதை அறிவிக்க ஜி.வி.பிரகாஷ் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.