சிறைத் தண்டனை அனுபவிக்கும் கைதிகளில் சிறப்பான நடத்தையை வெளிக்காட்டுபவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
சிறைச்சாலை சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப இந்த சட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தம்மை விடுவிக்குமாறு கூறி, வெலிக்கடை சிறைச்சாலையின் கூரையில் ஏறி உண்ணாவிரதத்தில் இருக்கும் கைதிகளிள் நலன் குறித்து விசாரிக்க இன்று (23) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றபோதே இதை தெரிவித்துள்ளார்.
கூரையில் உண்ணாவிரதம் இருந்துவரும் சில கைதிகளுடன் நீதி அமைச்சர் அன்பாக கலந்துரையாடினார்.
கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதிலும், நல்ல நடத்தை கொண்ட கைதிகளுக்கான தண்டனையை குறைப்பதிலும், அனைத்து கைதிகளுக்கும் ஒரே நடைமுறையைப் பின்பற்றுவது குறித்தும் உண்ணாவிரதக் கைதிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக நீதி அமைச்சகம் கூறுகிறது.
மேல்முறையீடுகளை தாக்கல் செய்வதில் ஏற்படும் தாமதங்கள், மறுவாழ்வு முறையை முறையாகச் செயல்படுத்துதல் மற்றும் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான சிறப்பு விசாரணை அமைப்பை உருவாக்குவது பற்றியும் அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.
அதன்படி, கைதிகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தவும், தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் வரை உண்ணாவிரதத்தை கைவிடவும், உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.