சூடானைத் தொடர்ந்து, அண்டை நாடான தெற்கு சூடானிலும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட சுமார் 4.26 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சூடான் நாட்டில் கனமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 18 மாநிலங்களில் 13 மாநிலங்களில் கனமழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள், அகதிகள் என சுமார் 2.88 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
இதேபோல் அண்டை நாடான தெற்கு சூடானிலும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட சுமார் 4.26 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருப்பதாக ஐ.நா. கூறி உள்ளது. அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சூடானில் ஆயிரக்கணக்கான அகதிகள் வேறு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அருகில் உள்ள கிராமங்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஏராளமானோர் தெருக்களிலேயே வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மாற்று இடம் தேர்ந்தெடுப்பதில் கடும் சவாலாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
சூடானில் ஆண்டு தோறும் ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை இடைவிடாமல் மழை பெய்யும். இதனால் சொத்துக்கள், உட்கட்டமைப்புகள் மற்றும் விளைநிலங்களில் உள்ள பயிர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு மழை சீசனில் 9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 140 பேர் உயிரிழந்தனர். மூன்று மாதம் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
இந்த ஆண்டில் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 35 ஆயிரம் வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் சூடான் அதிகாரிகள் கூறுகின்றனர்.