உலகளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. பல்வேறு நாடுகளில் தினமும் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் 2-வது அலை தாக்கியது. இதனால் தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்தபடி இருந்தது. டெல்டா வகை கொரோனா காரணமாக புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறையத் தொடங்கியது. இருந்த போதிலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை சில நாடுகளில் அதிகமாகவே காணப்பட்டது. இந்த நிலையில் உலகளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு கூறியதாவது:-
முந்தைய வாரம் உலகளவில் 40 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கடந்த வாரம் 36 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் உலகளவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
2 மாதங்களுக்கு பிறகு கணிசமாக குறைந்து வருகிறது. 2 பிராந்தியங்களில் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு குறைந்து இருக்கிறது. மத்திய கிழக்கில் 22 சதவீதமும், தென்கிழக்கு ஆசியாவில் 16 சதவீதமும் குறைந்துள்ளது. தென் கிழக்கு ஆசியாவில் கொரோனா இறப்புகளில் 30 சதவீதம் குறைந்துள்ளது.
அதேவேளையில் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக அளவில் கடந்த வாரம் இறப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்துக்குள் வந்தது. முந்தைய வாரத்தில் ஒப்பிடும் போது 7 சதவீதம் குறைவு ஆகும்.
அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, துருக்கி, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் அதிக பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. வேகமாக பரவும் டெல்டா மாறுபாடு தற்போது 185 நாடுகளில் காணப்படுகிறது.
இது உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ளது. டெல்டா மாறுபாடு உள்ள அனைத்து நாடுகளிலும் அது முக்கிய வைரசாக மாறி விட்டது.