தமிழகத்தில் 3 குழந்தைகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாவட்டம் வேலூரில், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் தினேஷ் குமார்-ஜீவிதா தம்பதியர்.
இவர்களுக்கு 7 வயதில் அக்சயா என்ற பெண் குழந்தையும், 5 வயதில் நந்தகுமார் என்ற ஆண் குழந்தை மற்றும் ஆறு மாத கைக்குழந்தை என 3 குழந்தைகள் உள்ளனர்.
தினேஷ்குமார் தினமும் மது குடித்துவிட்டு ஜீவிதாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். தொடர் பிரச்சனை காரணமாக ஜீவிதா கோபித்துக்கொண்டு தாய் வீட்டில் இருந்து வந்த நிலையில், செப்டம்பர் 22-ஆம் திகதி சலவன்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜீவிதாவின் தம்பி ஜெகதீஷ் வியாழக்கிழமை மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
பலமுறை தொடர்பு கொண்டும் ஜீவிதா அழைப்பை எடுக்காததால் சந்தேகம் அடைந்த ஜெகதீஷ் ஜீவிதாவின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் தாள்பாள் உள்ளே போடப்பட்டிருந்த நிலையில் நீண்ட நேரம் கதவை தட்டியும் ஜீவிதா வெளியே வராமல் இருந்துள்ளார்.
அச்சமடைந்த ஜெகதீஷ் பக்கத்து வீட்டாரின் உதவியோடு தாழ்ப்பாலை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். உள்ளே சென்று பார்த்ததில் தீபிகா தனது 3 குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த தெற்கு காவல் நிலைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் விசாரணை மேற்கொண்டார்.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்பத்தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த ஜீவிதா தனது 3 குழந்தைகளையும் துணியால் கழுத்தை இறுக்கிக் கொன்றுவிட்டு தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
3 குழந்தைகளை கொலை, செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.