மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு அரசடி, பொற்கொல்லர் வீதியில் உள்ள வீடொன்றில் சிறுமியின் சடலம் கிடப்பதாக நேற்றிரவு (27) கிடைத்த தகவல்களை தொடர்ந்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி, மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையில் தரம் 08 கல்வி பயிலும் 13 வயது சிறுமியென பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை பெற்றோர் வெளியில் சென்ற நிலையில், சகோதரிகள் இருவர் வீட்டிலிருந்துள்ளதாகவும், உயிரிழந்த சிறுமி இணையவழி கற்றல் நடவடிக்கையிலிருந்த நிலையில், அவரது அக்கா குளிக்கச் சென்றுள்ளார். குளியலறையிலிருந்து வந்தபோது, தங்கை மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சிறுமியின் மரண விசாரணையை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெட்னம் மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.