லட்ச தீபம் :
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தன்று லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் ஸ்ரீநெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோவிலில் காணும் இடமெல்லாம் தீபங்களாக காணப்படும். பல்லாயிரக்கணக்கானோர் சுற்றுவட்டாரங்களில் இருந்து வந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோவிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றிவைத்து வழிபடுவார்கள்.
21 பிண்டங்கள் :
பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடை வதற்காகச் செய்யப்படும் வழிபாட்டைச் சடங்குகளில், நாராயண பலி எனும் பூஜையும் ஒன்று. அகால மரணம் மற்றும் துர்மரணம் அடைந்தவர்களுக்கு இந்தப் பரிகாரத்தைச் செய்வார்கள். ராமேஸ்வரம் தலத்தில் 21 பிண்டங்கள் (ஒரு தலைமுறைக்கு ஒன்று வீதம்) வைத்து வழிபாடுவார்கள். பவானி கூடுதுறை தலத்தில் 77 தலைமுறையினருக்காக 7 பிண்டங்கள் வைத்து பித்ருகாரியம் செய்வது குறிப்பிடத்தக்கது.
மூன்று கை தண்ணீர் போதும்:
முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம்இருந்து பெற்று பிதுர்தேவதைகளிடம் வழங்குபவர்சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களைச் சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும். சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்றுகொண்டு, சூரியனைநோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் இவர் அருளைப் பூரணமாக பெறமுடியும்.
காகத்திற்கு உணவிடுங்கள்…
பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
வருமானத்தில் ஒரு பங்கில் பித்ருபூஜை :
உலகை ஆளும் பரமசிவனிடம் ஒரு நாள் பார்வதிதேவி, ஒரு மனிதனின் இல்லற தர்மம் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு பரமசிவன் கூறியதாவது:- அறிவுள்ள மனிதன் தொழில் மூலமாக தான் பெறும் செல்வத்தை மூன்று பாகங்களாக பிரித்து அதில் தர்ம காரியங்களுக்கு ஒரு பாகம். வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள ஒரு பாகம். கஷ்டம் ஏற்படுகையில் ஒரு பாகம் என்று பங்கீடு கொள்ள வேண்டும். இதில் முதல் பாகம் அன்ன தானம் செய்வது, ஏழைகளுக்கு உதவுவது. தேவர்களை பூஜிப்பது, பித்ருக்களை பூஜிப்பது, ஆசாரங்களை கடை பிடிப்பவர்களோடு சேர்ந்திருப்பது போன்றவற்றிக்காகச் செலவிட வேண்டும். இவ்வாறு சிவபெருமான் கூறினார்.