டோக்கியோவில் உள்ள இம்பீரியல் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஜப்பான் பிரதமராக புமியோ கிஷிடா பதவியேற்றார். அதை தொடர்ந்து, அவரது தலைமையிலான புதிய மந்திரி சபை பதவியேற்றது.
ஜப்பானின் நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்தவர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான ஷின்ஜோ அபே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அவரின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்த யோஷிஹைட் சுகா புதிய பிரதமராக பதவி ஏற்றார்.
ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் யோஷிஹைட் சுகாக்கு பெரிய அளவு செல்வாக்கு இருந்து வந்த போதிலும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுப்பதில் மிகவும் மந்தமாக செயல்பட்டதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.
அதோடு கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதால் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு பெரிதும் சரிந்தது.
இதனால் பிரதமர் பதவிக்கு வந்த ஒரே ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவு செய்தார்.
ஜப்பானை பொறுத்தவரையில் ஆளும் கட்சியின் தலைவர் யாரோ அவரே அரசின் தலைவராகவும், அதாவது பிரதமராகவும் தேர்வு செய்யப்படுவார்.
எனவே செப்டம்பர் இறுதியில் நடைபெறும் ஜப்பானின் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என யோஷிஹைட் சுகா அறிவித்தார்.
அதன்படி கடந்த மாதம் 29-ந்தேதி நடைபெற்ற தேர்தலில் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் தலைவராக முன்னாள் வெளியுறவு மந்திரி புமியோ கிஷிடா தேர்வு செய்யப்பட்டார்.
இதன் மூலம் 64 வயதான புமியோ கிஷிடா ஜப்பானின் புதிய பிரதமராக தேர்வானார்.
எனினும் அந்த நாட்டின் அரசியலமைப்பின்படி ஜப்பான் நாடாளுமன்றம் வாக்கெடுப்பின் மூலம் புதிய பிரதமரை தேர்வு செய்வது கட்டாயமாகும்.
அதன்படி பதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற சிறப்பு அமர்வு நேற்று நடந்தது.
இதில் புமியோ கிஷிடாவை எதிர்த்து, ஜப்பானின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான அரசியலமைப்பு ஜனநாயக கட்சியின் தலைவர் யூகியோ எடானோ போட்டியிட்டார்.
எனினும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மை வகிப்பதால் அதிக வாக்கு வித்தியாசத்தில் புமியோ கிஷிடா வெற்றிப்பெற்றார்.
அதனை தொடர்ந்து, புமியோ கிஷிடாவை ஜப்பானின் புதிய பிரதமராக நாடாளுமன்றம் முறைப்படி அறிவித்தது.
இதையடுத்து, தலைநகர் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஜப்பான் பிரதமராக புமியோ கிஷிடா பதவியேற்றார். அதை தொடர்ந்து, அவரது தலைமையிலான புதிய மந்திரி சபை பதவியேற்றது.
யோஷிஹைட் சுகாவின் மந்திரிசபையில் அங்கம் வகித்த 2 பேரை தவிர மற்ற அனைவரையும் புமியோ கிஷிடா மாற்றிவிட்டார்.
ராணுவ மந்திரி நோபுவோ கிஷி மற்றும் வெளியுறவு மந்திரி தோஷிமிட்சு மோடேகி ஆகியோர் தங்கள் பதவிகளில் தக்கவைக்கப்பட்டனர்.
இதில் நோபுவோ கிஷி முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேயின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.