குமார் நடேசனுக்காக பேச நாடாளுமன்றத்திற்குள்ளும் பலர் இருக்கிறார்கள் போல என தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார திசாநாயக்க அங்கதமாக குறிப்பிட்டார்.
ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய போது, ஏற்பட்ட நிலைமையையடுத்து இதனை தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
அண்மைக்காலமாக பால்மா, சீனி, எரிவாயுவை வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர். விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபட உரமில்லை. மக்கள் பொருளை வாங்க அதிக பணத்தை செலவிட வேண்டியுள்ளது.
விலைகளை கட்டுப்படுத்த அரசு பல வர்த்தமானிகளை வெளியிட்டது. அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய ஆணையாளர் நியமிக்கப்பட்டார். ஆனால் அவசரகால சட்டத்தாலோ, வர்த்தமானியாலோ, அத்தியாவசிய ஆணையாளாராலோ இதனை கட்டுப்படுத்த முடியவில்லை.
அரசியின் கட்டுப்பாட்டு விலை இரத்து செய்யப்பட்டது. வர்த்தகர்கள் விலையை நிர்ணயித்துள்ளனர். நேற்று அமைச்சரவை கூடி பாலிமா, எரிவாயு, மா, சீமெந்தின் விலை நீக்கப்பட்டுள்ளது. இன்று பால்மா விலை அதிகரித்துள்ளது. இன்று அமைச்சர் லசந்த அழகிய வண்ணவுடன், எரிவாயு நிறுவனம் கலந்துரையாடவுள்ளது. இன்று அதன் விலை அதிகரிக்கலாம். நாளை சீமெந்து விலை அதிகரிக்கும். அரசாங்கத்தால் விலையை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆழமான இந்த பொருளாதார நெருக்கடி பற்றி பல வருடங்களாக நாம் கூறி வந்திருக்கிறோம். இந்த நெருக்கடி இப்போது முற்றிவிட்டது. இதை பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் நாம் சொல்லி வந்திருக்கிறோம்.
கடன்கள் ஊடாக கொங்கிரீட் கட்டுமானங்களை செய்கிறோம். அதன்மூலம் மக்களின் பொருளாதார நிலைமை சீராகாது என கூறியிருந்தோம். அந்த நிலைமை இப்போது புரிகிறது.
இந்த பொருளாதார நிலைமைக்கு பின்னால் பல மோசடிகள் இருந்தன. மோசடிகளிற்காகவே கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தாமரைக் கோபுரத்தில் மின்குமிழ்கள் எரியும் போது அழகாக இருக்கிறது. ஆனால் அதன்மூலம் பொருளாதார சுமையாகியுள்ளது.என்றாவது ஒருநாள் அதில் வர்த்தக தொகுதிகள் ஆரம்பிக்கலாம். ஆனால் எமக்கு பொருளாதார மிகை கிடையாது. பணம் கிடையாது. முன்னுரிமையடிப்படையில் எதற்கு முன்னுரிமையளி்ப்பதென கற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் பொருளாதாரத்திற்கு சுமைகளைத்தான் அதிகரித்துள்ளோம்.
மத்தள விமான நிலையத்திற்கு பெரும் தொகை பணம் செலவிடப்பட்டத. 9 வருடங்களாகியும் பலனில்லை. அண்மையில் அமைச்சரவையில், மத்தள விமான நிலையத்தில் ஒரு வருடத்திற்கு இலவசமாக விமானங்களை தரையிறக்கலாமென்றும், கட்டுநாயக்கவின் கட்டணத்தை 50 வீதத்தால் குறைப்பதென்றும் கூறியிருக்கிறார்கள். மத்தள விமான நிலையத்திற்கு வருவதற்காக கட்டுநாயக்கவின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
அதுபோல சூரியவெவ மைதானத்திற்கு 8 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. எத்தனை போட்டிகளை நாம் விளையாடியிருக்கிறோம் என பாருங்கள்.
இந்த வெற்று அபிவிருத்திகளால் என்ன பலன் கிடைத்தது. உலகம் முழுவதும் பல வங்கிகளில் கடன்தான் வாங்கியுள்ளோம். எமது பிணை முறிகளை விற்கு கடன் பெற்றுள்ளோம். எம்மை கறுப்ப பட்டியலில் சேர்த்துள்ளனர். கடன்களை கூட பெற முடியாது.
எமது மோசடி கொடுக்கல் வாங்கல்களால் பொருளாதாரம் சீரழிந்துள்ளது.
உலக சனத்தொகை 8 பில்லியன். உலகத்தில் எந்த மோசடி பட்டியல் வந்தாலும், அதில் 20 மில்லியன் மக்களை கொண்ட எமது நாட்டவரின் பெயர்களும் வருகின்றன. 325 பேரின் பட்டியல் வந்தாலும், எமது நாட்டவர்கள் இருவரின் பெயர்கள் உள்ளன.
அண்மையில் அமெரிக்காவில் சுவெரி என்பவர் கைதானார். அவர் வரி மோசடி செய்தமை, தேர்தல் பிரச்சார மோசடி போன்றவற்றிற்காக 12 வருட சிறைத்தண்டனைவிதிக்கப்பட்டது. 2014, 15களில் அவருக்கு 6.5 பில்லியன் பெற்றுக்கொடுக்கப்பட்டது. இலங்கையின் நற்பெயரை ஊக்குவிக்க இந்த பணம் வழங்கப்பட்டது. அதில் அவர் 8.5 மில்லியன் டொலரைத்தான் செலவிட்டார் என்பது கண்டறியப்பட்டது.
அன்று மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால். அவரை மீண்டும் ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை ஆளுனராக நியமிக்கப்பட முன்னர் சுவேரி விவகாரம் ஏன் ஆராயப்படவில்லை. நன்றாக டீல் செய்பவர்களை பதவியில் அமர்த்தி மத்திய வங்கியை கட்டியெழுப்ப முடியுமென கருதுகிறீர்களா?
எமது பொருளாதாரத்தின் கறுப்பு பக்கம்.
2015 ஜனாதிபதி தேர்தலிற்கு சில நாட்களின் முன்னர் 4011 மில்லியன் பணம் செலுத்தப்பட்டது. யார் அந்த நிறுவனம்? சீன நிறுவனங்களிற்குத்தான் அந்த பணம் செலுத்தப்பட்டது.
அந்த நிறுவனங்கள் குமார் நடேசனின் நிறுவனத்தின் பெயரில் பணத்தை வைப்பிலிட்டுள்ளன. சுமார் 6 மில்லியன் டொலர்கள் அவரது ஹொங்கொங்கிலுள்ள கணப்பிற்கு வைப்பிலிடப்பட்டது. அதன் பின்னர் நடேசன் இங்கு ஒரு காணியை கொள்வனவு செய்கிறார்.
கம்பஹா, மல்வானை பிரதேசத்தில் 1000 ஏக்கர் காணி நடேசனிற்கு விற்கப்படுகிறது. உண்மையான கணக்கு 64 மில்லியன்கள். ஆனால் குறைந்த மதிப்பீட்டில், மத்திரை பணத்தையும் குறைத்து 30 மில்லியன்களிற்கு வாங்கியதாக குறிப்பிட்டுள்ளனர்.
நில்வளவ திட்டத்திற்கான பணம், ஹொங்கொங்கிலுள்ள நடேசனின் கணக்கிற்குவந்து, இலங்கைக்கு வந்துள்ளது என்றார்.
இதன்போது, குறுக்கிட்ட தினேஷ் குணவர்த்தன, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால், அது பற்றி இங்கு உரையாற்றுவது பொருத்தமற்றது என்றார்.
அதன்போது சபாநாயகர் ஆசனத்தில் உட்கார்ந்திருந்த வீரசுமன வீரசிங்க, இந்த விடயம் உரையாற்றுவது பொருத்தமற்றது என்றார்.
அநுரகுமார பதிலளித்த போது, அது பொருத்தமற்றதுதான். ஆனால் இதைவிட பொருத்தமற்ற, கீழ்த்தரமான வேலையல்லவா நடந்துள்ளது என்றார்.
அவர் மீண்டும் நடேசனின் கொடுக்கல் வாங்கல்களை பற்றி பேசிய போது, சபையை வழிநடத்திய வீரசுமன வீரசிங்க குறுக்கிட்டு, “இந்த விடயம் நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் பணிபுரியும் சட்டத்தரணிகளில் ஒருவன் நான். பிரதிவாதியான நடேசன் தரப்பில் இங்கு ஒருவரும் இல்லை. ஆகவே தயவு செய்து நிறுத்துங்கள்“ என்றார்.
இதற்கு நகைச்சுவையாக சிரித்தபடி பதிலளித்த அநுரகுமார- “நடேசன் தொடர்பாக இங்கு பலர் இருக்கிறார்கள் போல. யாருமில்லையென கூறினாலும், இங்கு பலரிருக்கிறார்கள் போல“ என பதிலளித்தார்.