தமிழகத்தில் இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் போராட்டம், அதன் முடிவுரையை எழுதிய விதமானது தமிழர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. சுமார் 13 லட்சம் இளைஞர்கள் கலந்து கொண்டிருந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவர்களுக்கு நிச்சயமாக கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் ஒருவாரம் அல்லது குறைந்தது இரண்டு மணி நேரம் அவகாசம் கேட்டும் அதற்கும் இணங்காமல் தமிழக அரசு அடிதடி நடத்தி இளைஞர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த விதமானது உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் நெஞ்சங்களில் தாங்க முடியாத வேதனையைக் கொடுத்துள்ளது.
ஏழு நாட்களாக இளைஞர்கள் நடத்திக்கொண்டிருந்த அறவழிப் போராட்டத்தை அரசியல் சாயமில்லாமல், வலிந்து வந்த அரசியல் கட்சிகளையும் தமக்குள் இணைத்துக் கொள்ளாமல் தூய்மையாகவே நடத்திக் கொண்டு இருந்தார்கள்.
அந்த இளைஞர்களில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் இருந்த போதும் யாரும், தமது அரசியல் அடையாளத்தை வெளியில் காட்டவில்லை. அந்தப் போராட்டத்தில் தமிழர், இஸ்லாம், கிறிஸ்தவர் என்ற வேறுபாட்டையும் எவரும் பாராட்டவில்லை.
தம்மோடு ஒன்றுபட்டு நின்ற இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த நண்பர்கள் தொழுகை செய்ய வேண்டும் என்பதற்காக, அந்த நெருக்கடிக்குள்ளும் தனியாக இடத்தை ஒதுக்கி, மண்ணை துப்பரவு செய்து கொடுத்த தமிழ் இளைஞர்களின் ஒற்றுமையைக் கண்டு மனம் பெருமிதம் அடைந்தது.
ஜல்லிக்கட்டு தமிழரின் கலாசாரம் என்றும் அதைத் தடுப்பதை தமிழர்கள்தான் எதிர்க்க வேண்டும் என்றும் இளைஞர்கள் கூறியபோதும், தமிழர் என்றால் நாங்களும்தான் என்று போராட்டத்தில் இணைந்து நின்ற இஸ்லாமிய சகோதரர்களை பெருமையோடு பாராட்டவேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை அங்கே ஒரு இஸ்லாமியன் முதலில் தமிழன், மதத்தால்தான் அவன் இஸ்லாமியன், பிறகு இந்தியன் என்பதுதான் இந்திய தேசத்தின் ஒற்றுமைக்கு பலமான அடித்தளமாகும்.
ஆகவே ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் மதத்தை பாராட்டாமல் ஒவ்வொரு இஸ்லாமியனும் முன்வந்து போராடியபோது அந்தப் போராட்டம் வலிமையாக இருந்தது. அந்தப் போராட்;டத்தில் ஒரு அர்த்தம் இருந்தது. அதிலொரு இன ஐக்கியம் இருந்தது.
ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டமோ, நிரந்தர அனுமதிச் சட்டமோ கிடைந்திருந்தாலும், அதற்காக, பல்வேறு துன்பங்களைச் சந்தித்தபடி அறவழிப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த அந்த இளைஞர்களை பக்குவமாக அணுகி, விடயத்தை தெளிவுபடுத்தி அவர்கள் போராட்டத்தை கௌரவமாக நிறுத்திக்கொள்ளும் ஒரு சூழலை தமிழக அரசு தோற்றுவித்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் தமிழக அரசை உலகத் தமிழினமே போற்றிப் புகழ்ந்திருக்கும். இப்போது தமிழக அரசானது அனுபவமற்ற தலைமையைக் கொண்டிருக்கின்றது என்பதை நடந்து முடிந்த சம்பவங்கள் அம்பலப்படுத்திவிட்டுள்ளன.
போராட்டத்தில் இளைஞர்கள் கலந்து கொண்டு தமது இயற்கை உபாதைகளை எதிர்கொள்வதற்கும், உணவு, தண்ணீருக்கும் பாரிய சிரமத்தை எதிர்கொண்டிருப்பார்கள். ஒருவேளை அரசியல் கட்சி ஒன்றே அந்தப் போராட்டத்தை நடத்தியிருந்தாலும், அந்த இளைஞர்களை பராமரிக்க திணறிப்போயிருப்பார்கள். அந்த இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட முன்வந்ததால், எல்லா இடர்களையும் அவர்களே தாங்கிக்கொண்டு போராடினார்கள்.
அவர்களின் போராட்டத்தை கவனத்திற்கொண்டு, அரசியல் தலைமைகள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும். இதில் மத்திய அரசும், மாநில அரசும் அக்கறையோடு செயற்பட்டிருக்க வேண்டும். மாணவர்கள் தமது போராட்டத்தில் அரசியல் தலையீட்டை ஒதுக்கியிருந்தாலும், பொறுப்புக் கூறவேண்டிய அரசுகள் அந்தப் போராட்டத்தை நீடிக்கவிடாமல் பார்த்திருக்க வேண்டும்.
தம்மை அவஸ்த்தைப்பட விட்டுவிட்டு, அரசியல் தலைமைகள் என்ன செய்கின்றார்கள் என்ற கோபத்தில், போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த இளைஞர்களும், யுவதிகளும், இந்தியப் பிரதமர் மோடியையும், தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வத்தையும் விமர்சிக்கும் கோஷங்களை முன்வைத்துப் போராடத்தான் செய்வார்கள்.
பொதுவாழ்வில் தம்மை யாரும் விமர்சிக்கவே கூடாது என்று எதிர்பார்க்க முடியாது. அதுவும், கருத்துச் சுதந்திரமும் எழுத்துச் சுதந்திரமும் இருப்பதாக இன்னும் நம்பப்படும் இந்திய மண்ணில், பொதுவாழ்வில் இருப்பவர்கள் குறித்து காரசாரமான விமர்சனங்களை எதிர்பார்க்கத்தான் வேண்டும். அதற்காக அதிகாரத்தை கையில் வைத்திருக்கின்றோம் என்பதற்காக யாரும், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ய முடியாது.
ஆனால் தமிழகத்தில் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்று கூறிய காவல்துறையே, அது எப்போதும், ‘அதிகாரத்திலிருப்பவனின் ஏவல் நாய்தான்’ என்பதை மீண்டும் நிரூபித்து, தமிழகத்தின் வரலாற்றில் அழிக்க முடியாத கறுப்பு நாளை பதிவு செய்து கொண்ட அசிங்கத்தை அரங்கேற்றிவிட்டார்கள்.
போராட்டத்தில் கலந்துகொண்டு, உணர்ச்சியில் குமுறிக் கொண்டிருந்த இளைஞர்களை ஒரு வரிசைக் கிரமமாக வெளியேற்றுவதாக இருந்தாலும், குறைந்தது ஒரு நாள் தேவைப்பட்டிருக்கும். அத்தகைய நிலையில் ‘உடனடியாக போராட்டத்தை கைவிட்டு, இடத்தைவிட்டு ஓடுங்கள்’ என்று கூறி அவர்கள் மீது தடியடியை நடத்துவதானது ஜீரணிக்க முடியாத விடயமாகும்.
அதைவிடவும் கேவலமான விடயம், காவல்துறையினரே ஏழைகளின் குடிசைக்கு தீ வைத்தும், வாகனங்களை தீ வைத்தும், கற்களைக் கொண்டு தாக்கியும், வாகனங்களை அடித்து நொறுக்கியும் நடத்திய அராஜகத்தை எவராலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதற்கான விலையை ஆட்சியாளர்கள் நிச்சயமாக அறுவடை செய்வார்கள்.
அதுபோலவே, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள், குழந்தைகள், இளைஞர்களை வெறியோடு தாக்குவதைப் பார்த்தால், அவர்கள் மீது மத்திய மற்றும் தமிழக அரசுகள் தமது கோபத்தைக் காட்டியிருப்பதாகவே காவல்துறையினரின் செயற்பாடு அமைந்தது.
காவல்துறையினருக்கு இந்த இளைஞர்கள் மீது இத்தனை வெறி எதற்கு? அல்லது இளைஞர்களை வெறித்தனமாகத் தாக்கினால்தான், எதிர்காலத்தில் இதுபோன்ற பொதுப் பிரச்சினைகளுக்கு வீதியில் இறங்கிப் போராடமாட்டார்கள் என்று அரசுகளும், அவர்களுக்கு பின்னால் இருக்கும் வர்த்தக முதலைகளும் நம்புகின்றார்களா?
ஜல்லிக்கட்டு தேவை என்று போராடிய இளைஞர்களின் போராட்டத்தை அமைதியாக முடித்துக் கொள்வதற்கு முடியாமல் போனதற்கு மத்திய, மாநில அரசுகளை குற்றம் சுமத்தும் அதேவேளை வேறுசில காரணங்களையும் நாம் தேடவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
ஏன் என்றால் இலங்கையில் தமிழர்கள் நடத்திய விடுதலைப் போராட்டமும் இறுதியில் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் போய் நின்றபோது, அங்கே ஒடுங்கிப்போயிருந்த தமிழ் மக்கள் செய்வதறியாது, கடலுக்குள் பாய்வதைத் தவிர வேறு வழியில்லாமல் நின்றார்கள். பின்னர் அறை நிர்வாணமாக ஆணும், பெண்ணுமாக கடலில் விழுந்து இலங்கைப் படைகளிடம் தஞ்சம்கோரி ஓடும்படியான ஒரு துரதிஷ்டத்தை விடுதலைக்காக போராடிய தமிழ் இனத்துக்கு ஏற்படுத்தியது.
அதே காட்சியையே மெரினாவில் போராடிய தமிழ் இளைஞர்கள் காவல்துறையினரின் தாக்குதலிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், தமது போராட்டத்தைத் தொடர்வதற்காகவும் கடலில் இறங்கி நின்றபோது எமக்கு நினைவுபடுத்தியது.
இங்கே சிங்களப்படைகள் தமிழர்களை கூண்டோடு அழிக்க வேண்டும் என்று தாக்கியதைப்போலவே, தமிழ் நாட்டில் இளைஞர்களை வெறிகொண்டு தாக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை தாக்கியது.
தமிழர்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டங்கள் இறுதியில் கடல் அண்ணையின் கண்முன்னால், தாக்குகின்ற தரப்புகளிடம் மண்டியிடுகின்ற போராட்டங்களாகவே இறுதிக் கதையை எழுதி முடிக்கின்றனவே, இது சாபமா அல்லது, தமிழர்கள் உணர்ச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, போரியல் தந்திரோபாயத்திற்கும், அரசியல் சாணக்கியத்திற்கும் கொடுக்காமல் போராடுவதா? எது காரணம்?
மெரினாவில் நடைபெற்ற இளைஞர்களின் போராட்டம் ஒரு துயரமான முடிவைச் சந்திப்பதற்குக் காரணமாக கருதப்படுவது, அந்த இளைஞர்களின் போராட்டம் ஒரு ஒழுங்கமைக்கப்பட்டதாக இருக்கவில்லை. ஆதலால் ஒரு செய்தியை எல்லோருக்கும் சொல்வதற்கு பொறிமுறை ஒன்று இருக்கவில்லை. போராட்டத்தின் விளைவை சீர்தூக்கிப்பார்ப்பதற்கும், அதை ஏற்றுக்கொள்வதற்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே ஒரு தலைமை இருக்கவில்லை. ஆகையால்தான், ஜல்லிக்கட்டு மீதான தடைநீக்கம் என்ற செய்தியை முழு இளைஞர்களுக்கும் தெரிவிக்கும் பொறிமுறை இருக்கவில்லை. ஒரு தலைமை இல்லாததால், அரசின் அறிவிப்பை ஒரு தரப்பு ஏற்றுக்கொண்டபோதும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏனையவர்கள் அதை எதிர்த்தார்கள் என்றும் கூறப்படுகின்றது. இறுதியாக இத்தனை அசிங்கங்களையும் அரங்கேற்றிய அரசுகள் இப்போது ஜல்லிக்கட்டை தடை செய்த 2016ஆம் ஆண்டு அறிவிப்பை திரும்பப் பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கின்றது. இந்த அறிவிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அத்தனை இளைஞர்கள், யுவதிகளுக்கும் சமர்ப்பணமாகும்.
இந்தப் போராட்டமும் தமிழ் மக்களுக்கு பல நூறு செய்திகளைக் கூறுகின்றன. உரிமைகளுக்காவும் விடுதலைக்காகவும் தமிழினம் போராடுவது தவறு இல்லை. ஒற்றுமைப்பட முடியாத தமிழ் இனம் இங்கே வாழ்வதற்கான அத்தனை உரிமைகளுக்காகவும் போராடத்தான் வேண்டும். அந்தப் போராட்டங்களுக்கு சரியான நெறிப்படுத்தலும் விவேகமும் அவசியமாகும், உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல், போராட்டத்தை இலக்கு நோக்கி நகர்த்தும் தலைமையும் அவசியம் என்பதாகும்.