தமிழகத்தில் திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி சிங்கிபுரம் வடக்கு காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவருக்கும், சுஜிதா (28) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து மனைவியை அழைத்துக்கொண்டு செல்வகுமார் சென்னை சென்றார்.
அங்கு கொரோனா ஊரடங்கு காரணமாக செல்வகுமாருக்கு சரிவர வேலை இல்லை. திருமணம் ஆகி ஒரு மாதம் முடிந்த நிலையில் சுஜிதாவை அழைத்துக்கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு வந்தார் செல்வகுமார்.
பின்னர் மாமனார் வீட்டில் சுஜிதாவை விட்டுவிட்டு செல்வகுமார் மீண்டும் சென்னை சென்றுள்ளார். அதன்பிறகு செல்போனில் மட்டும் மனைவியுடன் செல்வகுமார் பேசி வந்துள்ளார்.
கடந்த 7 மாதங்களாக அவர் மனைவியை பார்க்க வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் செல்வகுமாருக்கு மதுகுடிக்கும் பழக்கமும் இருந்ததாக தெரிகிறது. அது சமீபத்தில் தான் சுஜிதாவுக்கு தெரியவந்தது.
இதனை அறிந்த சுஜிதா அதிர்ச்சியடைந்ததோடு மனம் உடைந்தார். மேலும் கடந்த 7 மாதங்களாக கணவர் தன்னை பார்க்க வரவில்லையே என்ற கவலையிலும் இருந்துள்ளார்.
இதற்கிடையே வீட்டில் தனியாக இருந்த சுஜிதா, தன்னுடைய அறையில் நேற்று காலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுஜிதாவின் தாய் விஜயபானு அளித்த புகாரில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.