மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரியென கூறிக்கொள்ளும் ஒருவர் தனது கள்ளக்காதலியின் வீட்டில் இருந்த போது, அப்பெண்ணின் கணவரிடம் வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் போது தனது மனைவியுடன் இருந்த பொலிஸ் அதிகாரியின் தலைக்கவசம், மற்றும் பொலிஸ் அதிகாரியின் கைபேசி என்பவற்றையும் கணவர் கைப்பற்றியதுடன், தான் இல்லாத நிலையில் தனது வீட்டுக்கு ஓஐசி வந்து தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருப்பதாக அவர் மொனராகலை பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.
அத்துடன் சிக்கிய பொலிஸ் அதிகாரியின் கையடக்க தொலைபேசி மற்றும் தலைக்கவசம் ஆகியன இன்னும் அந்த நபரின் கைவசம் உள்ளதாகவும் , விசாரணைகளில் அது வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பெண்ணின் கணவரின் முறைப்பாட்டின்படி, கடந்த 6 ம் திகதி தான் வீட்டை விட்டு வெளியேறி இரவு 11.30 மணியளவில் வீடு திரும்பிய போது, வீட்டின் ஒரு அறையில் பொலிஸ் அதிகாரி இருந்தார்.
இதனையடுத்து கணவர் உடனடியாக, மனைவியினதும், பொலிஸ் அதிகாரியினதும் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துக் கொண்டுள்ளார். இதன்போது வீட்டு முன் கதவை திறந்து கொண்டு பொலிஸ் அதிகாரி தப்பியோட, முறைப்பாட்டாளர் விரட்டிச் செல்கையில், பொலிஸ் அதிகாரி தடுமாறி விழுந்துள்ளார்.
அப்போது கணவரின் கையடக்க தொலைபேசி வெளிச்சத்தில், விழுந்தவர் பொலிஸ் அதிகாரியென்பதை தான் அறிந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பொலிஸ் அதிகாரி தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
இதனையடுத்து கணவரின் புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மொனராகலை பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.