இலங்கையில் 8 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்று நோய் காணப்படுவதாக மார்பகப் புற்று நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஹசந்தி ஜயலத் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், நாட்டில் பதிவாகும் புற்று நோயாளர்களில் 27 சத வீதமான பெண்கள் அதாவது நான்கில் ஒரு பகுதியினர் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
எவ்வாறிருப்பினும் மார்பகப் புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் மார்பகங்களை அகற்றாமல் , புற்று நோய் கட்டிகளை மாத்திரம் அகற்றி அதனை நூறு வீதம் குணப்படுத்த முடியும் என்றும் ஹசந்தி ஜயலத் தெரிவித்துள்ளார்.
புற்று நோய்க்கான காரணங்களாக அதிக உடற் பருமன் , மது மற்றும் புகைபொருள் பாவனை உள்ளிட்டவை காணப்படுகின்றன. இவை தவிர்க்கக் கூடிய காரணிகளாகும்.
எனினும் பரம்பரையின் காரணமாக சிலருக்கு மார்பகப் புற்று நோய் ஏற்படும். அதே போன்று இது போன்ற எந்த காரணிகளும் இன்றியும் இந்நோய் சிலருக்கு ஏற்படக் கூடும். இவை தவிர்க்க முடியாத காரணிகளாகும் என்றும் அவர் தெரிவித்தார்.