அமாவாசை தினங்கள் என்பது மூதாதையர்களை வழிபடுவதற்குரிய தினமாகவே கருதப்படுகிறது. அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியைப் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் அவர்களின் பசி அடங்கி, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசை தோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம். சூரியனும், சந்திரனும் இணையும் தினமே அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.
அமாவாசை தினங்களில் தை அமாவாசை சிறப்பு மிகுந்த தினமாக கருதப்படுகிறது. இந்த நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நன்மை அளிப்பதாகும். அன்றைய தினம் கடல், ஆறு மற்றும் புண்ணிய நதிகளின் ஓரங்களில், இறந்த நம்முடைய முன்னோர்களுக்கு, தாய், தந்தையர்களுக்கு திதி கொடுக்கலாம்.
அவ்வாறு திதி கொடுப்பதற்கு, தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு போன்ற தலங்களும், வடமாநிலங்களில் காசி, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களும் சிறந்த இடங்களாக குறிப்பிடப்படுகின்றன. திதி கொடுக்கும் அன்றைய தினம், சூரிய வழிபாடு செய்வது அவசியமான ஒன்றாகும். இறந்தவர்களின் நாள்,தேதி தெரியாதவர்களும், 12 அமாவாசையன்றும் திதி கொடுக்க முடியாதவர்களும் தை, ஆடி மகாளய அமாவாசை திதிகளில் திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலன் கிடைப்பதாக ஐதீகம்.
நமது முன்னோர்களின் திசையாக தெற்கு உள்ளது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது. அந்த மாதத்தில் பெருமாள், பித்ரு லோகம் செல்வார். அங்குள்ளவர்கள் அனைவரும், பெருமாளுக்கு பாதபூஜை செய்துவழிபடுவார்கள். இந்தப் பூஜையின் போது மகாவிஷ்ணு உடல்முழுவதும் எள் தானியம் நிறைந்து காட்சியளிப்பார். முன்னோர்களின் ஆராதனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் பெருமாள், அவர்களுக்கு பூஜை செய்ததற்கான பலன்களை வழங்குவார். இந்த பலன்களை பித்ருக்கள் மூலம் பூமியில் வாழும் அவர்களது உறவினர்களும் பெறுவார்கள்.
பின்னர் பித்ருக்களை 15 நாட்கள் பூலோகத்துக்கு சென்று உங்கள் குடும்பத்தினருக்கு பலன்கள் கொடுத்து வாருங்கள் என்று கூறி அனுப்பி வைப்பார். இதைத்தொடர்ந்து நமது முன்னோர்கள் அவர்கள் உறவினர் குடுபத்தைக்காண ஆசையுடனும் மகிழ்ச்சியுடனும் பூமியை நோக்கி புறப்படுவார்கள். மகாளய அமாவசையன்று அனைவரும் கூடுகின்றனர். அந்த நேரத்தில் நாம் அவர்களை வணங்கி முனோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்வது அவசியம். ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை அமாவாசையன்று விடைகொடுத்து அனுப்புகிறோம்.
இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களின் தாகத்தை தீர்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர் களுக்கு முக்திபேறு கிடைக்கும். மேலும் அன்றைய தினம் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், துணி தானம் செய்யவேண்டும். மறைந்த தாய், தந்தை படங்களுக்கு வீட்டில் மாலை அணிவித்து அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து வணங்க வேண்டும்.
நம் முன்னோர்கள், காகத்தின் வடிவில் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால் காகத்துக்கு உணவு அளிப்பது முக்கியம். அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது.
தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்தபின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும்.
முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை முன்தினமே ஊறவைத்து பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைப்பது நல்லது. தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.
அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டிருப்பார்கள். அவர் களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மன்மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டல் ஒருசில பித்ருக்கள் கோபத்துடன் சாபம் தந்துவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது. ஆகவே தவறாது சிரார்த்தம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்க வேண்டும். நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும்.
அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது.
நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக் கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.