ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டம் அமைதியாக நடந்தது. ஜல்லிக் கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் போராட்டம் முடிவடையும் நிலையில் போலீசாருடன் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து வன்முறை சம்பவங்கள் நடந்தன.
மெரினாவில் நடந்த மாணவர்கள் போராட்டத்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவு அளித்து வந்தார். நடந்த சம்பவம் குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டம் பற்றிய விவரங்களை மாணவர்கள் கேட்டனர். கவர்னர் கையெழுத்து இல்லாமல் ஒரு அறிவிப்பு நகல் கொண்டு வரப்பட்டது. அதுபற்றி சரியான விளக்கம் அளிக்க யாரும் இல்லை.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெரிய கூட்டத்தை கலைக்கும் முயற்சியில் போலீசார் இறங்கினார்கள். அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்று ஒலி பெருக்கி மூலம் அறிவிக்க தொடங்கினார்கள்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஜல்லிக்கட்டு சட்டம் பற்றி விவரத்தை வக்கீல் மூலம் அறிய 2 மணி நேரம் அவகாசம் கேட்டனர். ஆனால் போலீசார் அதை ஏற்காமல் அங்கு இருந்தவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்கள்.
அந்த நேரத்தில் நான் அங்கு இல்லை. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். இதுபற்றி தகவல் எனக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது என்னை சந்தித்தவர்களிடம் போராட்டத்தில் வெற்றி பெற்று இருக்கிறோம். இதை கொண்டாடுவோம் என்று கூறினேன்.
இதற்காக 500 கிலோ கேக் வாங்கவும் என்னை சந்தித்தவர்கள் ஏற்பாடு செய்தனர். அதற்குள் போலீசார் அதிரடி நடவடிக்கையாக போராட்டகாரர்களை அப்புறப்படுத்துவதில் கெடுபிடி காட்டினார்கள். இதனால் பிரச்சினை ஏற்பட்டது.
உடனே நான் மெரினாவுக்கு வந்து 2 மணி நேரம் அவகாசம் தாருங்கள் மாணவர்களிடம் பேசி சமாதானம் செய்கிறேன் என்று போலீசாரிடம் கெஞ்சி கேட்டேன். போலீஸ் அதிகாரிகள் அனுமதித்தனர். நான் அங்கு சென்று நாம் வெற்றி பெற்று விட்டோம் என்று சொன்னேன். பலர் அதை ஏற்றுவெளியேறினார்கள்.
ஆனால் ஒரு சிலர் வெளியே செல்லாமல் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினார்கள். சிலர் தனிததமிழ்நாடு என்று கோஷம் எழுப்பினார்கள். அவர்கள் மாணவர்கள் அல்ல என்பதை புரிந்து கொண்டேன். போராட்டத்தை வழிநடத்த தலைமை இல்லாததால் பிரச்சனை ஏற்பட்டது. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் போலீசார் அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டனர். போராட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளும் நிலை உருவானது.
இவ்வாறு அவர் கூறினார்.