புதிய படத்தின் அறிமுக விழா, விளம்பர நிகழ்ச்சிகளில் அதில் நடித்த நடிகர்-நடிகைகள் பங்கேற்பது வழக்கம். ஆனால் நயன்தாரா அவர் நடித்த படங்களுக்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை. இதை காரணம் காட்டி தெலுங்கு படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு சிறிது காலம் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஒரு விழாவில் பேசிய விவேக் “பட விழாக்களில் கலந்து கொள்ளாத நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு நயன்தாரா அளித்த பதில்…
“நான் பட விழாக்களில் கலந்து கொள்வதில்லை என்று குற்றச்சாட்டு கூறுகிறார்கள். படத்தில் நடிக்க என்னிடம் கதை சொல்ல வரும்போதே, நான் பட விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்பதை தயாரிப்பாளரிடம் சொல்லி விடுகிறேன். எனக்கென்று ஒரு கொள்கை வைத்து இருக்கிறேன்.
தொலைக்காட்சிகளில் அமர்ந்து படம்பற்றிய ஒரே விஷயத்தை எல்லோரிடமும் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. இன்று எல்லாமே மாறி விட்டது. டிஜிட்டல் மயம் ஆகிவிட்டது. வித்தியாசமான விளம்பர யுத்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. ‘தனி ஒருவன்’, ‘மாயா’ போன்ற படங்களை நான் விளம்பரப்படுத்தி இருக்கிறேன். சிறிய படங்களுக்கும் நான் கட்டாயம் விளம்பரம் செய்தே ஆக வேண்டிய நேரங்களிலும் என்னால் முடிந்தவற்றை செய்கிறேன்.
நடிகர், நடிகைகள் விளம்பரம் செய்வதால் ஒரு மோசமான படத்தை ஓட வைத்து விட முடியாது. படத்தின் விளம்பரத்தை விட அதன் கதை நன்றாக இருந்தால்தான் அது ஓடும். மோசமான படத்தை 100 நாள் விளம்பரம் செய்தாலும் தோல்விதான் கிடைக்கும்.
படவிழாக்களில் கலந்து கொள்ளாத நடிகைகளுக்கு கடைசி பகுதி சம்பளத்தை குறைத்து விடலாம் என்பது போன்று விவேக் சார் என்னைப்பற்றி சொல்லி இருக்கிறார். என்னுடைய சம்பளத்தை பலமுறை விட்டுக்கொடுத்திருக்கிறேன். சில படங்களுக்கு என் சம்பளத்தை குறைத்து இருக்கிறேன்”.