நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நாடாளுமன்றத்தையும் தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும் இதனால் அவரை உடனடியாக தேசத்துரோகியாக அறிவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் யோசனை முன்வைப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இதனை கூறியுள்ளார்.
விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினர் நாடாளுமன்றத்தை நடத்தப்பட உள்ள தமது பொதுக் கூட்டத்திற்காக பிரசார மேடையாக பயன்படுத்திக்கொண்டனர்.
நுகோடையில் இன்று நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான மக்களுக்கு தனது மரியாதைகள் உரித்தாவதாக வீரவங்க, நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஆளும் தரப்பை பார்த்து மரியாதை செலுத்தினார்.
இதுதான் மிகப் பெரிய கேலி, இவர்கள் நாடாளுமன்றத்தையும் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கும் குறுகிய நோக்கங்களுக்கும் பயன்படுத்துகின்றனர்.
இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரோஹித்த அபேகுணவர்தன, நுகேகொடை கூட்டத்திற்கு 5 லட்சம் பேர் வருவார்கள் எனக் கூறினார்.
நுகேகொடை கூட்டம் நடைபெறவுள்ள அங்குள்ள சுப்பர் மார்க்கட் வளாகம் அதன் பரப்பளவு 19 ஆயிரத்து 300 சதுர பரப்பாகும். அங்குள்ள கட்டிடம், வீதிகள் என அனைத்து இடங்களிலும் மக்கள் கூடினால், அங்கு சுமார் 80 ஆயிரம் பேர் இருக்க கூடிய இடவசதிகளே உள்ளன.
5 லட்சம் அல்ல முடிந்தால் 15 ஆயிரம் பேரை கூட்டி வந்து காட்டுங்கள். கூட்டு எதிர்க்கட்சியை கண்டு நாங்கள் பயப்படவில்லை. பொய்களை கூறும் போது அதனை தெளிவுப்படுத்த வேண்டியது எமது கடமை.
இந்த கூட்டத்தினை முதல் துப்பாக்கி வேட்டு என்றுதானே கூறுகின்றார்.இதுவரை எத்தனை முதலாவது துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து விட்டனர்.
இன்னும் இரண்டு மாதங்களில் மீண்டும் முதலாவது துப்பாக்கி வேட்டை தீர்ப்பார்கள். இது இப்படியே தொடரும். பழையவற்றை விட்டு விடுவோம்.
நுகேகொடையில் முதலாவது துப்பாக்கி வேட்டு என்றால் அடுத்ததை இரண்டாவது துப்பாக்கி வேட்டு எனக் கூறுங்கள். அதற்கு அடுத்ததை மூன்றாவது வேட்டு எனக் கூறுங்கள் எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.